பக்கம் எண் :

உணவில் பரிசோதனைகள்69

Untitled Document
பண்டங்கள் பரிமாறுவர்.    நான் அதிகச் சிக்கனமான வாழ்க்கையை
நடத்தி வந்தபோது,     இந்த இரண்டாவது பிரிவில்தான் சாப்பிடுவது
வழக்கம்.

     பிரதானமான     உணவுப்     பரிசோதனையோடு   பல சிறு
சோதனைகளையும் நடத்தி வந்தேன். உதாரணமாக, மாவுப் பண்டங்கள்
எல்லாவற்றையும்    ஒரு சமயம்      விலக்கியிருந்தேன்.  மற்றொரு
சமயத்திலோ, ரொட்டியும் பழமும்    மாத்திரமே சாப்பிட்டு வந்தேன்.
ஒரு  சமயம் பால்கட்டி, பால்,   முட்டைகள் மாத்திரம்   சாப்பிட்டுக்
கொண்டிருந்தேன்.    இந்தக்     கடைசிச் சோதனையைக் குறித்துக்
கொஞ்சம் கவனிப்பது முக்கியம்.    இச்சோதனை    இரு வாரங்கள்
வரையிலும்கூட       நீடிக்கவில்லை.   மாவு கலந்த பண்டங்களைத்
தின்னக்கூடாது   என்று சொன்ன சீர்திருத்தக்காரர்,   முட்டைகளின்
மேன்மையைக்       குறித்துப் பிரமாதமாகச் சொன்னதோடு அவை
மாமிசமாகா   என்றும் கூறினார். முட்டையைத் தின்பதால் உயிருள்ள
எதற்கும்      துன்பம்      விளைவித்து விடவில்லை     என்பது
வெளிப்படையாகத்       தெரிந்தது.  இந்த வாதத்தில் மயங்கி, என்
விரதத்தையும் மறந்துவிட்டு,    நான் முட்டை தின்ன ஆரம்பித்தேன்.
ஆனால்,       நான் இதில் செய்த தவறு தற்காலிகமானதே.   நான்
கொண்டிருந்த விரதத்திற்குப் புதியதொரு வியாக்கியானத்தையே நான்
அனுசரிக்க வேண்டும். மாமிசம் என்பதைப் பற்றிய என் தாயாருடைய
கருத்தில் முட்டையும்      சேர்ந்ததே   என்பதை நான் அறிவேன்.
இவ்விதம்        விரதத்தின்    உண்மைக்     கருத்தை    நான்
கண்டுகொண்டதுமே,முட்டை   சாப்பிடுவதையும், அப்பரீட்சையையும்
ஒருமிக்க விட்டுவிட்டேன்.

     இந்த   வாதத்தில் அடங்கிய,    கவனிக்கத்தக்க   நுட்பமான
விஷயம் ஒன்று உண்டு.     இங்கிலாந்தில் புலால் என்பதற்கு மூன்று
வகையான வியாக்கியானங்கள்  கூறப்படுவதை அறியலானேன். இதில்
முதல் வியாக்கியானப்படி, மாமிசம் என்பது பறவைகள், மிருகங்களின்
இறைச்சியே.   இந்த வியாக்கியானத்தை    ஒப்புக்கொள்ளும் சைவ
உணவுவாதிகள்,    பட்சிகள்,   மிருகங்களின்        மாமிசத்ைதை
உண்ணமாட்டார்கள். ஆனால், மீன் சாப்பிடுவார்கள் ; முட்டைகளும்
சாப்பிடுவார்கள்      என்பதைச் சொல்லவே     வேண்டியதில்லை.
இரண்டாவது   வியாக்கியானப்படி மாமிசம் என்றால், எல்லா உயிர்ப்
பிராணிகளின்       புலாலுமேயாகும்.   ஆகையால்,   இக்கருத்துக்
கொண்டவர்கள்,      மீன்   சாப்பிட மாட்டார்களெனினும் முட்டை
சாப்பிடுவார்கள்.   மூன்றாவது வியாக்கியானமோ,   உயிர் வாழ்வன
எல்லாவற்றின் புலாலும்,    அவைகளிடமிருந்து  கிடைப்பவைகளும்
மாமிசம் என்று முடிவு கட்டியிருந்தது. இதன்படி, பால்,   முட்டைகள்
முதலியனவும் மாமிசம்   ஆகிவிடுகின்றன. முதல் வியாக்கியானத்தை
ஒப்புக் கொள்வதாயின்,     முட்டை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல்