பக்கம் எண் :

104தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

வைத்திருந்தனர். இக்காலத்தில் பரெஞ்சுக்காரர்கள், சிதம்பரம்
கோவிலை இராணுவ பலமிக்க கோட்டையாகப் பயன்படுத்தினர்.
1760இல் ஆங்கிலேயர்கள் சிதம்பரத்தை பிரெஞ்சுக்காரரிடமிருந்து
பெற்றனர். மைசூர் மன்னர் ஹைதர் அலி கர்நாடகத்தின்மீது
படையெடுத்தபொழுது (1780) மைசூர்ப் படைகள் சிதம்பரம்
கோவிலையும் நகரையும் பிடித்தன. சர் அயர் கூட் என்ற
ஆங்கிலத் தளபதி சிதம்பரம் நகரிலிருந்து ஹைதரின் படைகளை
அகற்றினார்.

கலைச்சிறப்பு

1. சிவபெருமான் நடராசராக, சிவகாமி சுந்தரியம்மனுடன்
வீற்றிருக்கும் சிற்றம்பலத்தின் அதிட்டானம் கல்லாலானது. ஆனால்,
அதன் பக்கங்கள் மரங்களால் ஆக்கப்பட்டுள்ளன. இதன்
கூரைப்பகுதி பொன்னால் வேயப்பட்டுள்ளது. சித்சபைக்கு
எதிரில் கனக சபை உள்ளது. கனக சபையின் கூரைப்பகுதி
தாமிரத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

நடராசப் பெருமானுக்குரிய சபைகளாக ஐந்தினைக்
கூறுவர். அவற்றுள் ஒன்று சிதம்பரத்திலுள்ள கனகசபை
அல்லது பொன்னம்பலம் ஆகும். திருவாலங்காடு-இரத்தினசபை,
மதுரை-இரசிதசபை, திருநெல்வேலி-தாமிரசபை,
திருக்குற்றாலம்-சித்திரசபை ஆகியவை மற்ற நான்கு
சபைகளாகும்.

2. ‘நிருத்த சபை’ என்பது கனகசபைக்குத் தெற்கில் உள்ளது.
இது நாட்டிய அறை எனப்படும். சிவனுக்கும் (நடராசர்) சக்திக்கும்
(காளி) வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் தில்லையில் நடனம்
ஆடினர் என்றும், சிவபெருமான் அந்த நடனத்தில் ஒரு காலைத்
தலைக்கு மேல் தூக்கி ஆடினார் என்றும், ஆனால்,சக்தி அவ்வாறு
ஆட முடியவில்லையென்றும், இதனால் சக்தி சிவனிடம் பணிய
நேர்ந்தது என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது.
காளியுடன் ஒரு காலைத் தூக்கி ஆடிய மூர்த்தியே நிருத்த
சபையிலிருக்கும் ஊர்த்துவ தாண்டவர் ஆவார்.