நிருத்த சபை, இரதத்தின் அமைப்பைக் கொண்டுள்ளது.
சக்கரங்களுடன் கூடிய குதிரைகள் இச்சபையின் வாயிலுக்கு
அருகில் இருபக்கங்களிலும் உள்ளன. இச்சபையிலுள்ள 56
தூண்கள், இரத அமைப்பு ஆகிய யாவும் சிற்ப, கட்டடக்
கலைச் சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
3. இக்கோவிலின் நான்கு ராய கோபுரங்களும் கலையழகு
படைத்தவை. கோபுரங்களின் அடிப்பகுதியில் காணப்படும்
தெய்வங்களின் திரு உருவங்களும் இதர சிற்ப வேலைப்பாடுகளும்
சிற்பக் கலைத்திறன்மிக்கவை. கருங்கல் அமைப்பிற்கு மேல்
உள்ள கோபுரத்தின் நிலைகளில் புராண இதிகாசங்களில்
கூறப்படும் இறைவனின் அருள் விளையாடல்களைச்
சித்திரிக்கும் அழகிய கதைச் சிற்பங்கள் உள்ளன.
4. பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் 108 நாட்டிய
நிலைகள் கூறப்பட்டுள்ளன. தில்லைக் கோவிலின் கிழக்குக்
கோபுரத்தில் பரத நாட்டியத்தின் கரண வகைகள்
கற்சிற்பங்களில் சித்திரிக்கப் பட்டுள்ளன. மேலைக் கோபுரத்திலும்
இதுபோல் உள்ளன. இக்கரணங்களைத் தேவரடியார் என்ற
கோயில் மாணிக்கங்கள் பிற சோழ கோவில்களில்
ஆடிக்காட்டினார்.
5. இராஜ சபை எனப்படும்
ஆயிரம் கால் மண்டபம்
கட்டடக் கலைச்சிறப்பு மிக்கது. இம்மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள
ஒரே கல்லினாலான பெரிய, உயரமான தூண்கள், பல டன்
எடை உள்ளவை. போக்குவரவு வசதியற்ற அக்காலத்தில்
இவ்வளவு கனமுள்ள கற்களை, நீண்ட தூரத்திலிருந்துகொண்டு
வந்து நிறுவியிருப்பது, அக்கால, மக்களின் இறைபணிச்
சிறப்பையும், பொறியியல் திறனையும், மனத்துணிவையும்
காட்டுகிறது. ஆயிரம் கால் மண்டபத்தில்தான் மாணிக்கவாசகர்
இலங்கை மன்னரது ஊமைப் பெண்ணைப் பேசவைத்து பௌத்த
சமயத்தினரை வாதில் வென்றார் என்று கூறப்படுகிறது. சேக்கிழார்
தமது பெரியபுராணத்தை இம்மண்டபத்தில் அரங்கேற்றினார்
என்பர்.
6. பாண்டிய நாயகர் எனப்படும் சுப்ரமணிய சுவாமி
கோயில், கலையழகு கொண்டதாகும்.
|