பக்கம் எண் :

106தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

கனக சபை அருகில் கோவிந்தராஜ சுவாமி ஆலயம்
உள்ளது. செஞ்சியை ஆட்சி புரிந்த நாயக்க வம்சத்து
கிருஷ்ணப்பர்,
பிற்கால விஜயநகர மன்னர் மூன்றாம்
ரங்கன்
ஆகியோரின் திருப்பணிகள் இவ்வாலயத்தில்
உள்ளன. பெருமாளின் உருவச்சிலை செஞ்சி நாயக்கர்
கிருஷ்ணப்பரால் பலத்த எதிர்ப்புக்கிடையே
எழுப்பப்பட்டதாகும்.

சைவ சமயத்தின் தனிப் பெருந்தலமாக விளங்கும்
சிதம்பரம் கோவில் முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற
தலைசிறந்த மரபுரிமைச் செல்வமாகும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

சிதம்பரம் நகரிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகம்
கி.பி. 1929இல் செட்டி நாட்டு அரசர் இராஜா சர் அண்ணாமலை
அவர்களால் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலுள்ள ஒருசில
தனியார் பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம்
ஒரு சிறந்த உயர்கல்வி மையமாக ஐம்பது ஆண்டுகளுக்கும்
மேலாக விளங்கி வருகிறது. இது பழங்கால நாளந்தாப்
பல்பலைக் கழகத்தைப் போன்று இயங்குகிறது எனலாம்.

சீர்காழி

சிதம்பரத்திலிருந்து 19 கி.மீ. தொலைவில் சீகாழி
என்று அழைக்கப்படும் சீர்காழி உள்ளது. இது ஒரு சிறந்த
சைவ வழிபாட்டுத் தலமாகும். இங்குள்ள இறைவன்
சட்டைநாதர்
எனப்படுகிறார். அம்மன் திரிபுரசுந்தரி ஆவார்.
சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர்
இவ்வூரில் தோன்றினார். இவருக்கு இங்குள்ள கோவிலில் தனி
சந்நிதி உள்ளது. தருமபுர ஆதீனத்தாரின் நிர்வாகத்தில்
இக்கோவில் உள்ளது. சிற்ப, கட்டட வேலைப்பாட்டிற்கு ஓர்
எடுத்துக் காட்டாகவும் இக்கோவில் விளங்குகிறது.

சீர்காழியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் திருமுல்லை
வாசல்
என்ற இடத்தில் ஒரு சிவாலயம் உள்ளது. இறைவன்
முல்லைவனநாதர் ஆவார். அம்மன் கோதையம்மை
எனப்படுகிறார்.