பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்107

வைத்தீஸ்வரன் கோவில்

சீர்காழியிலிருந்து 5 கி.மீ தொலைவில் வைத்தீஸ்வரன்
கோவில் உள்ளது. புள்ளிருக்குவேளுர் என்பது இதன் பழைய
பெயராகும். இவ்வூரில் புகழ்மிக்க சிவாலயம் உள்ளது.
குருமூர்த்தி நாயக்கர்
என்ற குறுநில மன்னர் கி.பி. 1607இல்
இவ்வாலயத்தில் விரிவான திருப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.
அம்மன் சந்நிதியிலுள்ள ஒரு மண்டபம் தஞ்சையை ஆண்ட
மராத்திய மன்னரால் கி.பி. 1767இல் கட்டப்பட்டது.

இக்கோவிலின் இறைவன் வைத்தியநாதர் ஆவார்;
இறைவி தையல்நாயகி எனப்படுகிறார். ஓராண்டில் 6 நாள்கள்
மாலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் வைத்தியநாதன்மீது
விழும்படியான கட்டட அமைப்பு இங்கு உள்ளது. இக்கோவிலில்
முத்துக்குமாரசுவாமிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. இக்கோவில்
தருமபுர ஆதீனத்தாரின் நிர்வாகத்தில் உள்ளது. இக்கோவிலின்
சிறப்பான குட முழுக்கு விழா 1969ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.

பரங்கிப்பேட்டை

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் கிழக்குக்
கடற்கரையில் பரங்கிப்பேட்டை (Porto Novo) பல
ஐரோப்பியர்களின் வாணிகத் தலமாக விளங்கிற்று.
கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் போர்ச்சுகீசியர்கள்
இங்குத் தங்கி வாணிபம் புரிந்தனர். கி.பி. 1643இல் டச்சுக்காரர்கள்
இதைத் தங்கள் வாணிபத் தலமாக்கினர். டச்சுக்காரர்களின்
வீழ்ச்சியையடுத்து இந்த இடம் ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியாரின் ஆதிக்கத்தில் வந்தது(1681). இரண்டாம்
மைசூர்ப் போரின் பொழுது ஹைதர் அலி இவ்வூரின்மீது
படையெடுத்தார். ஆனால், சர் அயர் கூட் என்ற ஆங்கிலத்
தளபதி ஹைதரைப் பரங்கிப்பேட்டையில் கி.பி. 1781இல்
தோற்கடித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ‘கடல்வாழ்
உயிரினங்களின் ஆய்வுக்கூடம்’ பரங்கிப்பேட்டையில்
உள்ளது.