பக்கம் எண் :

16தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

ஆட்சி புரிந்தார். சென்னையில் ஆட்சிபுரிந்த ஆங்கில
ஆளுநர்களில் சிலர் எலிகு ஏல், எட்வர்டு கிளைவ்,
வில்லியம் பெண்டிங் பிரபு, சர் தாமஸ் மன்றோ,
ஹோபர்ட் பிரபு, கன்னிமாரா பிரபு, சர் ஜார்ஜ் பிரடெரிக்
ஸ்டான்லி, எர்க்சின் பிரபு
ஆகியோர் ஆவர்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது தமிழகத்திலும் ஆங்கில
இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல சமூகச் சீர்திருத்தங்கள்
கொண்டுவரப்பட்டன. மேனாட்டு அறிவியல், கலாச்சாரம்
ஆகியவை பரவின. ஆங்கில மொழி பயிற்றுவிக்கப்பட்டது.
1853முதல் இருப்புப் பாதைகள் போடப்பட்டன. தபால், தந்தி
முறைகள் கொண்டுவரப்பட்டன. இரயத்துவாரி நில வரிமுறை
கொண்டுவரப்பட்டது. 1713முதல் அச்சுக்கலை புகுத்தப்பட்டது.
1857இல் சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக் கழகங்கள்
தோற்றுவிக்கப்பட்டன. தல ஆட்சிமுறை விருத்தியடைந்தது.
பெரிய அணைகள் கட்டப்பட்டன. நீர் மின்சக்தி திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டன. செய்தித்தாள்கள் வெளிவந்தன.
மேனாட்டு மருத்துவமுறை பரவியது. தொல்பொருள் சின்னங்கள்
பாதுகாக்கப்பட்டன. அரசாங்க வரவு-செலவு (பட்ஜெட்) முறை,
பஞ்ச நிவாரண நடவடிக்கைகள் ஆகியவை மேர்கொள்ளப்பட்டன.
மேனாட்டு முறையில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுச் ‘சட்டத்தின்
முன் அனைவரும் சமம்
’ என்ற நியதி ஏற்படுத்தப்பட்டது.
அரசாங்க ஆட்சி முறையில் மக்களுக்குப் பயிற்சி கிடைத்தது.
மாநிலம், மாவட்டங்களாகவும் வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தைக் கவனிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள்
நியமிக்கப்பட்டனர். வருவாய்த்துறை நிர்வாகம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
பல புதிய நகரங்கள் தோன்றின. பல துறைமுகங்கள் அமைக்கப்பட்டன.
சுருக்கமாகக் கூறின், இன்றைய ஆட்சி முறைக்கு அடிப்படையான
யாவும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டன எனலாம்.
இருப்பினும், இந்திய மக்களிடம் எழுந்த தேசிய உணர்ச்சி
அந்நியரான ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி நமது
நாட்டைச் சுதந்தரமடையச் செய்தது.