கி.பி. சுமார் 5ஆம் நூற்றாண்டில் இப்பகுதி ஒரு சமண
மையமாக விளங்கியது எனப்படுகிறது.
திரிசிரா மலையிலுள்ள குடைவரைக் கோவில்கள்
திரிசிரா மலையில் இரு குடைவரைக் கோவில்கள் உள்ளன.
மலையின் உயரே, தாயுமானசுவாமி சந்நிதியிலிருந்து
உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குச் செல்லும் வழியில்
ஒரு குடைவரைக் கோவிலும், மலையின் அடிவாரத்தில்
மற்றொரு குடைவரைக் கோவிலும் உள்ளன.
மலைமீது உள்ள குடைவரைக் கோவில் பல்லவ
மன்னன் மகேந்திரவர்மன்(கி.பி.600-630) காலத்தில்
அமைக்கப்பட்டது. ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’
என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது.
(மகேந்திரவர்மன் அமைத்த இதுபோன்ற குடைவரைக்
கோவில் மகேந்திரவாடி, மாமண்டூர், தளவனூர்
முதலிய இடங்களில் உள்ளன.) லலிதாங்குரன் என்பது
மகேந்திரவர்மனின் மற்றொரு பெயராகும். இக்குடைவரைக்
கோவில் சிவனுக்காக அமைக்கப்பட்டதாகும். ஆனால்,
இப்பொழுது இங்கு வழிபாடு இல்லை, குகைக் கோவிலின்
கிழக்குப் பகுதியில் வெற்றிடமாக உள்ள அறையில் முன்பு
லிங்க வழிபாடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கருவறை, கருவறை முன்னுள்ள மண்டபம், கருவறையின்
மேற்குப் பகுதியிலுள்ள சுவர்ச்சிற்பம், மண்டபத் தூண்கள்
ஆகிய யாவும், மலையைக் குடைந்து அமைக்கப்பட்டவையாகும்.
மேற்புறச்சுவரிலுள்ள ‘கங்காதரர்’ சிற்பக் காட்சி பல்லவர்காலச்
சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக
விளங்குகிறது. இக்கோவிலின் கவர்களிலுள்ள கல்வெட்டுகள்
பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கின்றன.
அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று, மன்னன் மகேந்திரவர்மன்,
சைவ சமயக் குரவர் அப்பர் முயற்சியினால் சமண சமயத்திலிருந்து
சைவ சமயத்திற்கு மாறியதைக் கூறும் கல்வெட்டாகும்.
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப்
போர்களின்போது இக்குடைவரைக் கோவில் ஆங்கிலேயரின்
வெடிமருந்துக் கூடமாகப் பயன்பட்டதாம்.
|