பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்171

ஸ்ரீகமலவல்லி நாச்சியார் கோவில் உறையூரிலுள்ள
பழமை மிக்க வைணவக் கோவிலாகும். கருவறையில்
பெருமாளையும் ஸ்ரீகமலவல்லி நாச்சியாரையும் காண்பது
சிறப்பாக உள்ளது. கருவறையின் முன்பகுதியையும்,
கருடாழ்வார் சந்நிதியையும் சூழ்ந்துள்ள கருவறைச்சுவர்
சிறந்த சிற்ப வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. கருவறை
முன்னுள்ள மண்டபம் அழகிய கற்றூண்களைக் கொண்டுள்ளது.
சில தூண்கள் தட்டினால் இசையெழுப்பும் இசைத் தூண்களாகவும்
உள்ளன. ஒரு தூணில் அனுமனின் உருவம் வடிக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் நம்மாழ்வார் சந்நிதியும் இதையடுத்து உடையவர்
சந்நிதியும்
உள்ளன. இதையடுத்து உறையூரில் வாழ்ந்த
திருப்பாணாழ்வார்
சந்நிதி உள்ளது.

நாச்சியார் கோவிலருகில் வெக்காளியம்மன் கோவில்
உள்ளது. தில்லைநகர்ப் பகுதியில் தான்தோன்றீஸ்வரர்
கோவில் உள்ளது.

கிறித்தவ ஆலயங்கள்

‘பழைய கோவில்’ எனப்படும் கத்தோலிக்கக் கிறித்தவ
ஆலயம் பாலக்கரை அருகில் (எடத் தெருவில்) உள்ளது.
இதுவே திருச்சி நகரின் பழமைமிக்க கிறித்தவ ஆலயமாகும்.
இது வியாகுல மாதா ஆலயம் என்ற பெயரைக் கொண்டுள்ளது.
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் திருச்சிப் பகுதியில் வீரமாமுனிவர்
சமயப் பணியாற்றியபொழுது இவ்வாலயம் எழுப்பப்பட்டதாகத் தெரியவருகிறது.

புனித மரியன்னை பேராலயம், பழைய கோவிலிலிருந்து
சிறிது தொலையில் (மேலப்புதூரில்) உள்ளது. இவ்வாலயம்
கி.பி.1842இல் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாலயத்தின்
கூரைப்பகுதிகளிலும், சுவர்களிலும் கிறித்தவ சமயச் சம்பவங்களை
விளக்கும் வண்ண ஓவியங்கள் உள்ளன. இங்குள்ள கண்ணாடி
ஓவியங்களில் குறிப்பிடத்தக்கது பிரான்ஸ் நாட்டின் மன்னர்
புனித லூயி (Louis IX) உருவத்தைக் கொண்டதாகும்.