பழைய கோவிலுக்கு அருகில்
உலக மீட்பர் ஆலயம்
உள்ளது. இவ்வாலயம் 1881ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இதன் அழகிய கோபுரம் திருச்சி நகரின் பண்பாட்டுச்
சின்னமாகக் காட்சியளிக்கிறது.
தெப்பக்குளம் அருகில் புனித ஜோசப் உயர்நிலைப்
பள்ளியை அடுத்து லூர்து மாதா ஆலயம் உள்ளது. திருச்சி
நகரின் மத்தியில் கத்தோலிக்க சமயத்தினரின் முக்கிய
ஆலயமாக இது விளங்குகிறது. பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு
பேராலயத்தின் மாதிரியில் இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது.
கி.பி. 1903இல் இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டது. 60 மீட்டர்
உயரமுள்ள அழகிய கோபுரத்தையும் ‘கோதிக்’
கலையம்சங்களையும் இவ்வாலயம் கொண்டுள்ளது.
இவ்வாலயத்தின் கோபுரம் திருச்சி நகருக்கு ஒரு அழகிய
தோற்றத்தைக் கொடுக்கிறது.
புத்தூரில் பாத்திமா ஆலயம் உள்ளது.
திருச்சி நகரில் தெப்பக்குளத்தின் வடபகுதியில்
கிறிஸ்து
ஆலயம் உள்ளது. இது திருச்சி நகரிலுள்ள பழமைமிக்க
கிறித்தவ ஆலயமாகும். தென்னிந்தியத் திருச்சபையினருக்
குரியதாகும் (C.S.I). இவ்வாலயத்தின் ஆதிப்பகுதி கி.பி. 1766இல்
சுவாட்ஸ் (1728-1798) பாதிரியாரால் கட்டப்பட்டதாகும்.
இவ்வாலயத்திற்கான நிலம் கர்நாடக நவாப் முகமதலியால்
கொடுக்கப்பட்டது. இவ்வாலயத்தின் புனித பீடம்
சிறப்புமிக்கதாகும். இவ்வாலயத்தின் ஒரு பகுதியில்
கி.பி. 1826இல் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராயர் ஹீபர்
(1783-1826) தம் கடைசி ஆராதனையை நடத்தினார்.
ஆராதனை முடிந்த அன்று (ஏப்ரல் 3, 1826) நீதிபதி
பேட் (Bird) அவர்களின் இல்லத்தை அடுத்துள்ள சிறு குளத்தில்
குளிக்கும் பொழுது திடீரென நோயுற்று மூழ்கி இறந்தார். இவரது
உடல் புனித ஜான் ஆலயப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பேராயர் ஹீபர் குளித்த குளம் உறையூர் நீதிமன்றப் பகுதியில்
இன்றும் உள்ளது. குளத்திற்கு அருகில் பேராயர் ஹீபரின்
நினைவுச் சின்னம் ஒன்று கி.பி. 1882ஆம் ஆண்டு
எழுப்பப்பட்டுள்ளது.
|