பக்கம் எண் :

18தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

இருப்புப்பாதை நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட
ஆட்சியாளரான ஆஷ் என்பவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத்
தாமும் உயிர் துறந்தார். வாஞ்சிநாதரின் வீரச்செயல் இந்தியச்
சுதந்தரப் போரில் ஒரு அழியா இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியச் சுதந்தரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்த
வீரத்தியாகிகள் வரலாற்றில் ஓர் உயர் இடத்தைப் பெறும்
மற்றொருவர், வ.வே.சு.ஐயர் (வரகனேரி வேங்கட சுப்பிரமணிய
ஐயர் 1881-1925) ஆவார். பாலகங்காதர திலகர் கி.பி. 1916இல்
தோற்றுவித்த ‘தன்னாட்சி இயக்கத்தை’ (Home rule Movement)
அன்னி பெசண்ட் அம்மையார்
சென்னையில் நடத்தினார்.
சர் C.P. இராமசாமி ஐயர், பட்டாபி சீத்தாராமய்யா
ஆகியோர்
இந்த இயக்கத்தில் பெரிதும் ஈடுபட்டனர். 1920ஆம் ஆண்டு
மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த
பொழுது இவ்வியக்கத்தில் தமிழ் நாட்டில் S. சத்தியமூர்த்தி,
கஸ்தூரி ரங்க ஐயங்கார், விஜயராகவாச்சாரியார், இராஜாஜி,
ஈ.வெ.ரா. பெரியார்
ஆகியோர் பெரிதும் ஈடுபட்டனர்.

1922, 1932இல் கள்ளுக்கடை மறியல்கள், தமிழகமெங்கும்
தீவிரமாக நடந்தன. மதுரைத் தொண்டர்கள் பாரதியாரின்
நாட்டுப்பற்றுள்ள பாடல்களைப் பாத யாத்திரையாகச் சென்று
பாடினர். மதுரைத் தியாகி சிதம்பர பாரதியின் முயற்சியால் வீர
சவர்க்காரின் ‘1857 முதல் சுதந்தரப் போர்’ என்ற நூல் ‘எரிமலை’
என்ற பெயருடன் தமிழில் வெளியிடப்பட்டு மக்களின் தேசிய
உணர்ச்சியைத் தூண்டியது. 1927இல் நீல் சிலை உடைப்புப்
போராட்டம் சென்னையில் நடந்தது. 1930இல் தண்டியில்
காந்தியடிகளின் தலைமையில் உப்புச் சத்தியாக்கிரகம்
நடந்தபொழுது தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் இராஜாஜி
தலைமையில் உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டது. தூக்கி
உயர்த்திய தேசியக் கொடியைக் காத்து திருப்பூர்க் குமரனும்,
சங்கரன் நாயரும் உயிர் துறந்தனர். 1930-32 போராட்டக் காலத்தில்
சுதேசி இயக்கம் வலுப்பெற்றுத் துணிக்கடை மறியல்கள் தமிழகத்தில்
தீவிரமாக நடந்தன. இம்மறியல்களின்போது பெண்களும் பெரிதும்
ஈடுபட்டுக் கைதானார்கள்.