பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்19

1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டப்படி
மாநிலங்களுக்குச் சுயாட்சி வழங்கும் திட்டப்படி தேர்தல்கள்
நடத்தப்பட்டன. சென்னை மாநிலத்தில் நடந்த தேர்தலில்
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இராஜாஜி தலைமையில்
அமைச்சரவை அமைத்தது (1937).

1939இல் மதுரையில் வைத்தியநாதய்யர் தலைமையில்
அரிசன மக்களின் ஆலயப் பிரவேசம் நடந்தது. இதைத்
தொடர்ந்து தமிழகத்தில் பல கோவில்கள் அரிசன மக்களுக்குத்
திறந்துவிடப்பட்டன.

1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பொழுது
ஆங்கிலேயர்கள் இந்திய மக்களின் சம்மதம் பெறாமலேயே
இந்தியாவை நேச நாடுகளுடன் போரில் ஈடுபடுத்தியதால்,
மாநிலங்களில் காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின.
தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவை பதவி
விலகியது. 1942 ஆகஸ்டில் நடைபெற்ற ‘வெள்ளையரே
இந்தியாவை விட்டு வெளியேறுக
’ இயக்கம் தமிழகமெங்கும்
குறிப்பாக மதுரைநகர், கோயம்புத்தூர், திருநெல்வேலி
நகர்ப்பகுதிகளில் தீவிரமாக நடந்தது. ‘கர்மவீரர்’ காமராஜர்,
சத்தியமூர்த்தி முதலிய பல தலைவர்கள் ‘ஆகஸ்டு இயக்கத்தில்’
பெரும் பங்கு பெற்றனர். 1942, ஆகஸ்ட் போராட்டம் மதுரை
நகரில் மிகவும் தீவிரமாக இருந்தது எனலாம். 1942, ஆகஸ்ட்
போராட்டங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப்
பலர் பலியாயினர். ஏராளமானோர் பலத்த காயமுற்றனர்.

இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் மாநிலத் தேர்தல்கள்
நடத்தப்பட்டன (1946). தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று
T. பிரகாசம்
தலைமையில் அமைச்சரவை அமைத்தது.
T. பிரகாசத்திற்குப்பின் O.P. இராமசாமி ரெட்டியார் தமிழக
முதலமைச்சர் ஆனார். காந்தியடிகள் தலைமையில் அஹிம்சை
முறையில் நடைபெற்ற இந்தியச் சுதந்தரப் போராட்டம் வெற்றி
பெற்று, 1947, ஆகஸ்ட் 15இல் இந்தியா சுதந்தரமடைந்தது.
அன்னியரான ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியாவெங்கும் நீங்கியது.