கோட்டை மாரியம்மன் கோவில் செந்திரராஜப் பெருமாள்
கோவில், வரதராஜப்பெருமாள் கோவில், தலைவெட்டி
முனியப்பன் கோவில் ஆகியவை இந்நகரிலுள்ள இதர
முக்கிய இந்துக் கோவில்கள் ஆகும்.
அம்மாபேட்டைக்குத்
தெற்கிலுள்ள குமரகிரியில்
பழனியாண்டவர் கோவில் உள்ளது. சேலம் நகரிலிருந்து
8 கி.மீ. தொலைவிலுள்ள அயோத்தியா பட்டணத்தில்
கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. இது ஒரு சிறந்த
வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும். இலங்கை மன்னன்
இராவணனை வென்றபின், இராமர் அயோத்திக்குச் சென்ற
பொழுது இவ்வூரில் ஒரு நாள் தங்கினார் என்று கூறுவர்.
கோதண்டராமசுவாமி கோவிலின் கருவறையில்
ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, பரதர், சத்ருக்னர்,
சுக்ரீவர்,
விபீசணர் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. 47 மீட்டர்
உயரமுள்ள கோபுரம் இக்கோவிலின் வாயிலில் அழகுடன்
காட்சியளிக்கிறது. மகாமண்டபத்திலுள்ள கற்றூண்கள்
வேலைப்பாடுமிக்கவை. மதுரை நாயக்க மன்னர் திருமலை
(1623-59) காலத்தில் இந்த மண்டபம் கட்டப்பட்டதாகக்
கருதப்படுகிறது. குதிரை வீரர்களைத் தாங்கியுள்ள இம்
மண்டபத்தின் கற்றூண்கள் உயரம் குறைந்தவையாக இருப்பினும்,
சிறந்த சிற்ப வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.
இம்மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் இசைத்
தூண்கள்
உள்ளன.
நாயக்கர் ஆட்சிக்
காலத்தின் சிறந்த ஒரு சின்னமாகக் கோதண்டராமசுவாமி கோவில் விளங்குகிறது.
கிறித்தவ ஆலயங்கள்
செவ்வாப்பேட்டையிலுள்ள
புனித மரியன்னை ஆலயம்
கத்தோலிக்கக் கிறித்தவர்களின் பழமைமிக்க
ஆலயமாகும்.
இது கி.பி. 1858இல் தோற்றுவிக்கப்பட்டது. புனித
அந்தோணியார் ஆலயம், புனித பிரான்சிஸ் சவேரியார்
ஆலயம், புனித நெஞ்ச ஆலயம் ஆகியவை சேலம்
நகர்பகுதியிலுள்ள இதர கத்தோலிக்கக் கிறித்தவ
ஆலயங்களாகும்.
|