பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்187

தாரமங்கலத்தில் கைலாசநாதர் கோவிலைத் தவிர
இளமேசுவரர் கோவில்,
பத்திரகாளியம்மன் கோவில்,
பெருமாள் கோவில் ஆகிய முக்கியக் கோவில்களும் உள்ளன.
இக்கோவில்களிலும் கட்டி முதலிகளின் திருப்பணிகள் உள்ளன.

தர்மபுரி

சேலம் நகரிலிருந்து 66 கி.மீ. தொலைவில் தர்மபுரி நகர்
உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அடங்கிய பகுதி சங்க காலத்தில்
தகடூர்
என வழங்கப்பட்டது. இன்றைய தர்மபுரி நகர்ப்பகுதியே
பண்டைய தகடூர் எனப்படுகிறது. தெற்கில் நாமக்கல்வரை தகடூர்
நாடு பரவியிருந்தது. தகடூர் நாட்டை அதியமான்கள் என்ற
சிற்றரசர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களுள் புகழ் பெற்றவர்
அதியமான் நெடுமான் அஞ்சி ஆவார்.

கி.பி. 1792ஆம் வருட ஸ்ரீரெங்கபட்டண உடன்படிக்கையின்படி
இன்றைய தர்மபுரி மாவட்டப்பகுதியும் சேலம் மாவட்டப்பகுதியும்
அடங்கிய பாரமஹால் மைசூர் மன்னன் திப்பு சுல்தானால்
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டது.
1966ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுத்
தர்மபுரி மாவட்டம் அவற்றுள் ஒன்று ஆயிற்று. தர்மபுரி
மாவட்டத்தின் தலைமையிடமாகத் தர்மபுரி நகர் விளங்குகிறது.

தர்மபுரிக்கு அருகில் அதமன் கோட்டை என்ற இடம்
உள்ளது. இங்கு அதியமான் கட்டிய கோட்டையின் அழிவுச்
சின்னங்கள் உள்ளன. அதியமானால் கட்டப்பட்ட இந்த
அதியமான் கோட்டை காலத்தால் மருவி ‘அதமன் கோட்டை’
என அழைக்கப்படுகிறது. தர்மபுரி பண்டைக்காலத்தில் ஒரு சமண
மையமாக விளங்கியது. இங்கு மல்லிகார்ச்சுனர் என்ற சமணக்கோவில்
உள்ளது. அதமன் கோட்டையில் இரு சமணக் கோவில்கள் உள்ளன.

தர்மபுரி நகரில் (மத்தியப் பேருந்து நிலையம் அருகில்)
தமிழ்நாடு அரசின் தொல்பொருள் துறையினரின் காட்சிக்கூடம்
உள்ளது. தர்மபுரி மாவட்டப்பகுதியில் கிடைத்த பல
தொல்பொருள்கள் இங்குக் காட்சிக்கு உள்ளன.