எட்டுத் தெய்வத் திருவுருவங்களைத் தவிர கனகசபையில்
மேலும் பல சிற்ப விநோதங்கள் உள்ளன. அழகாத்திரி
காலத்துக் குதிரைவீரர் ஒரு தூணில் சிற்பமாக
வடிக்கப்பட்டுள்ளார். இத்தூணின் கீழ்ப்பகுதியில் வீரர்
புலியுடன் சண்டையிடுங் காட்சி சிறப்புமிக்கது. புலியின்
உடம்பில் குத்தப்பட்ட கத்தி, புலியின் உடம்பினுள் சென்று,
பின்புறம் வெளிவந்துள்ள காட்சி பார்ப்போர் யாவரையும்
வியப்பில் ஆழ்த்துகிறது. யாளியின்மேல் உள்ள வீரர்கள்,
குதிரைமீதுள்ள வீரர்கள் ஆகிய ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள்
சிறந்த கலைப் படைப்புகள் ஆகும். கனகசபைச் சிற்பங்களில்
அக்கால மக்களின் நகைகள், முடி அலங்காரம், உடை,
இசைக்கருவிகள், பொழுதுபோக்கு முறை, வீர விளையாட்டுகள்,
வழிபாட்டு முறை, மானிட உடலமைப்பு ஆகிய யாவும் சிறப்புறச்
சித்திரிக்கப்பட்டுள்ளன.
கனக சபையின் கூரைப் பகுதியில் காணப்படும் தலைகீழாக
உள்ள சுழலும் தாமரைப்பூ, இதனருகிலுள்ள கிளிகள், ஒரே
கல்லினாலான கல் வளையங்கள், கோலாட்டம் மற்றும் நடனச்
சிற்பங்கள் ஆகியவை அக்காலச் சிற்பியின் கலைத் திறமையைக்
காட்டுகின்றன.
பட்டீஸ்வர சுவாமி கோவிலிலுள்ள கனகசபைச் சிற்பங்கள்,
மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் நமக்குக் கிடைத்த
மரபுரிமைச் செல்வமாகும் (Legacy).
துர்க்கை அம்மன் சந்நிதி முன்னுள்ள சிங்கத்தின் வாயினுள்,
சுழலும் கல் உருண்டை ஒன்று உள்ளது. இது ஒரு சிற்ப
விநோதம் ஆகும்.
கோவிலின் எதிரிலுள்ள தெப்பக்குளம், அளவில்
சிறியதாயினும் அழகில் சிறந்துள்ளது. 16 கோணங்களில்,
அழகிய படிக்கட்டுகளுடன் இத்தெப்பக்குளம் விளங்குகிறது.
கோவிலின் எதிரிலுள்ள ஐந்து இரதங்களும் மர
வேலைப்பாடு மிக்கவை.
|