பழனிப் பகுதியை ஆட்சிபுரிந்த பாளையக்காரர்களால்
கட்டப்பட்டது.பழனி நகரிலிருந்து 24 கி.மீ. தொலைவில்
கொழுமம்
என்ற கிராமம் உள்ளது. இங்கு சோளீஸ்வரர் கோவில் உள்ளது.
இது வீரசோழன் என்ற கொங்குச்சோழரால் கட்டப்பட்டதாகும்.
மதுரை நாயக்க மன்னர் திருமலை இக்கோவிலுக்குத் தானம்
வழங்கியதாக இங்குள்ள ஒரு கல்வெட்டிலிருந்து அறியப்படுகிறது.
சோளீஸ்வரர் கோவிலை அடுத்து கல்யாண வரதராஜப்
பெருமாள் கோவில் உள்ளது. பழனி நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில்
ஐவர் மலை
(அயிரவை மலை) உள்ளது. இங்குள்ள குகைத்தளங்களில்
சமணப் பெரியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மலையில் சிறிது
உயரம் சென்றதும் திரௌபதி அம்மனுக்கு ஒரு சிறு கோவில்
உள்ளது. இதனருகிலுள்ள மலைப்பாறையில் 16 சமணச்
சிற்பங்கள் வரிசையாக உள்ளன. இவை மலையைச் செதுக்கி
அமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன.
சமணச் சிற்பங்கள் சிறிய அளவினவாயிருப்பினும் அழகுற
வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களுக்கு அருகில்
வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள சமணச்
சின்னங்கள், இம்மலைப்பகுதி ஒரு காலத்தில் ஒரு சிறந்த
சமண மையமாக விளங்கியிருந்ததைக் காட்டுகின்றன.
கல்வெட்டுகள்மூலம் இம்மலையிலிருந்து சமண அறத்தைப்
பரப்பிய சமணப் பெரியார்களின் பெயர்கள், கல்வி போதித்த
ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியர் பெயர்கள்
அறியப்படுகின்றன. அச்சணந்தி என்ற சமணப் பெரியார்
இங்குள்ள தீர்த்தங்கரர் திருமேனிகளைச் செய்வித்தார்.
மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இரண்டாம்
வரகுண பாண்டியன் காலத்தில் (கி.பி. 870) இங்குள்ள இரண்டு
சுனைகளைப் புதுப்பிக்க 500 காணம் பொன் கொடுக்கப்பட்டது
என்ற கல்வெட்டுச் செய்தி வரலாற்றுச் சிறப்புடையதாக உள்ளது.
ஐவர் மலையிலுள்ள சமணச் சிற்பங்களைக் காப்பது நமது
கடமையாகும்.
|