பக்கம் எண் :

226தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

பழனி நகரின் மேல்புறம், இந்நகரின் பெரிய பள்ளிவாசல்
உள்ளது. இப்பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள இரு
கோபுரங்கள்
சுமார் 30 மீட்டர் உயரமுள்ளவை. தமிழ்
நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பழனிப் பள்ளிவாசல்
கோபுரங்கள் மிகவும் உயரமானவை என்று கூறப்படுகிறது.
இப்பள்ளி வாசலும், கோபுரங்களும் கி.பி. 1923இல் கட்டி
முடிக்கப்பட்டன.

பழனி நகரிலிருந்து 23 கி.மீ. தொலைவில் கீரனூரில்
இஸ்லாமிய மக்களின் சிறப்புமிக்க பள்ளிவாசல் அமைந்துள்ளது.
இது மஸ்ஜித் மதரசா பரிபாலன சபைக்குரியதாகும்.
இப்பள்ளிவாசலின் வரலாறு 17ஆம் நூற்றாண்டிலிருந்து
உள்ளது எனப்படுகிறது 1923ஆம் ஆண்டில் இப்பள்ளிவாசல்
முழுவதும் கருங்கல்லினால் அமைக்கப்பட்டது. கருங்கல்
வேலைப்பாடுகளுடன் விளங்கும் பள்ளிவாசலும் அதன்
கலைச் சிறப்புமிக்க கோபுரங்களும் கீரனூரின் சிறப்புமிக்க
சின்னங்களாக விளங்குகின்றன.

பழனி நகரின் மத்தியில் புனித மிக்கேல் வானதூதர்
ஆலயம்
உள்ளது. கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கான
இவ்வாலயம் 1934ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.
தென்னிந்திய திருச்சபையினருக்குரிய (C.S.I) ஆலயம் பழைய
தாராபுரம் சாலையில் உள்ளது. அமெரிக்கக் கிறித்தவச் சபையைச்
சேர்ந்த லாரன்ஸ் என்ற பெரியார் 1840ஆம் ஆண்டில் பழனியில்
முதன் முதல் கிறித்தவ வழிபாட்டை நடத்தினார். அவர் வழிபாடு
நடத்திய இடத்தில் 1851ஆம் ஆண்டு ஓர் ஆலயம்
எழுப்பப்பட்டது. டேவிட் வேதமுத்து என்பவர் மறைபோதகராக
இருந்த காலத்தில் (1872-1885) இவ்வாலயத்தின் கட்டடம்
விரிவுபடுத்திக் கட்டப்பட்டது (1876). ஒயிட் என்பவரால்
கிறித்தவ சமயப் பெரியார்களுக்காகப் பழனியில் ஓர் அழகிய
கட்டடம் கட்டப்பட்டது (1857-1863). இக்கட்டடத்தில் தற்பொழுது
பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் சில வகுப்புகள்
அடங்கியுள்ளன.