பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்229

22. மதுரை

உலகப் புகழ்பெற்ற நகரங்களில் மதுரை ஒன்றாகும். இந்நகர்
சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு தொடர்ச்சியான
வரலாற்றைக் கொண்டுள்ளது. மதுரை நகர் வரலாற்றின் முதல்
அத்தியாயத்தில் இடம் பெறுபவர்கள் பாண்டிய மன்னர்கள்.
கடைச்சங்க காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்னுள்ள
காலம்) பாண்டிய மன்னர்கள் மதுரையைத் தலைநகராகக்கொண்டு
ஆட்சி புரிந்தனர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்,
உக்கிரப்பெருவழுதி
ஆகியோர் கடைச்சங்கப் பாண்டிய
மன்னர்களில் மிக்க புகழ் பெற்றவர்கள் ஆவர். கி.பி.
ஏறக்குறைய 3ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து 6ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதிவரை மதுரையில் களப்பிரர்கள் ஆட்சி
ஏற்பட்டது. கடுங்கோன் (கி.பி. 560-590) என்ற பாண்டிய
மன்னன் களப்பிரர்களை வென்று மதுரையைத் தலைநகராகக்
கொண்டு பாண்டி நாட்டை ஆட்சி புரியத் தொடங்கினார்.

கி.பி. 560 முதல் பத்தாம் நூற்றாண்டுவரை கடுங்கோன்
வழி வந்த பாண்டிய மன்னர்கள் மதுரையில் ஆட்சி புரிந்தனர்.
அரிகேசரி மாறவன், ஜடிலா பராந்தக நெடுஞ்சடையன்,
இரண்டாம் வரகுணவர்மன்
ஆகியோர் கடுங்கோன் வழிவந்த
பாண்டிய மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
கி.பி. 10 - 12ஆம் நூற்றாண்டுக் காலத்தில் தஞ்சைச்
சோழர்களின்
ஆதிக்கம் மதுரையில் ஏற்பட்டது. பராந்தகச்
சோழன் மதுரையை வென்று ‘மதுரை கொண்ட பராந்தகன்’
என்ற பெயர் பெற்றார். ‘முதலாம் இராசேந்திரன் காலத்தில்
(1012 - 1044) மதுரையில் தஞ்சைச் சோழ மன்னர்களின் பிரதிநிதிகள்
சோழ பாண்டியர்
என்ற பட்டத்துடன் மதுரையைத்
தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தனர். 12ஆம் நூற்றாண்டின்
இறுதியில் பாண்டிய மன்னர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர்.
முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்
(1251-1268)
காலத்தில் பாண்டிய அரசு வடக்கில் நெல்லூர்வரை பரவி