1. சென்னை
தல வரலாற்றுச் சுருக்கம்
தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கும் சென்னை பண்டைய
தொண்டை நாட்டின் ஒரு பகுதியாகும். இப்பகுதி தொண்டையர்
என்ற திரையரின் கீழும், பின் பல்லவ மன்னர்களின்
ஆட்சிக்குட்பட்டும் இருந்தது. கி.பி. 9ஆம் நூற்றாண்டில்
பல்லவர்களின் வீழ்ச்சியையடுத்து, சென்னைப் பகுதிகள்
தஞ்சைச் சோழர்களின் ஆட்சியில் வந்தன. முதலாம் இராஜராஜ
சோழன் காலத்தில் (கி.பி 985-1016) தொண்டை மண்டலம்
ஜெயம் கொண்ட சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது.
பிற்காலச் சோழ மன்னர்கள் காலக் கல்வெட்டுகள்,
திருவொற்றியூர்,
திருவேற்காடு, திருவான்மியூர் முதலிய சென்னை
நகர்ப்பகுதிகளிலுள்ள பல கோவில்களில் உள்ளன.
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் சோழர்களின் ஆதிக்கம்
வீழ்ச்சியுறவே, சென்னைப் பகுதிகள் சம்புவராயர், மதுரைப்
பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வந்தன. பாண்டிய மன்னர்கள்
காலக் கல்வெட்டுகள் பல சென்னை நகர்ப்பகுதியிலுள்ள பல
கோவில்களில் உள்ளன. கி.பி. 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்
பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து விஜய
நகர மன்னர் புக்கரின் மகன் குமாரகம்பணர் தொண்டை
மண்டலப் பகுதியை வென்றார் (கி.பி 1361). இதுமுதல் சென்னைப்
பகுதிகள் விஜயநகர அரசின் ஆட்சியின்கீழ் வந்தன.
சென்னைக்கு ஐரோப்பியர் வருகை
கி.பி. 16,17ஆம் நூற்றாண்டுகளில் பல ஐரோப்பிய நாட்டினர்
வாணிபத்திற்காக இந்தியாவிற்கு வந்து குடியேறினர். இந்தியாவிற்குப்
புதிய கடல் வழியை முதன் முதலில் கண்டவர் (கி.பி 1498)
போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா ஆவார்.
|