நடத்தி சாந்தோமுக்கு 5 கி.மீ. வடக்கில், மதராஸ் பட்டினத்தை
அடுத்துள்ள மீனவர் வாழும் ஒரு கிராமத்தைப் பெற்று அங்கு
ஆங்கிலேயர் தங்கி வாணிபம் செய்ய உரிமை பெற்றார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சி கி.பி. 1639இல் நடந்தது.
இந்நிகழ்ச்சி நடந்தபொழுது முதலாம் சார்லஸ் இங்கிலாந்தின்
மன்னராயிருந்தார்.
வேங்கடப்பரிடம் பெற்ற கடற்கரைக் கிராமத்தில் ஆங்கிலேயர்
கி.பி. 1640முதல் வாணிபத்திற்காகக் குடியேற ஆரம்பித்தனர்.
கடற்கரையருகில் தங்கள் வாணிபத்தின் பாதுகாப்பிற்காக ஒரு
கோட்டையைக் கட்டலாயினர். கோட்டையின் ஒரு பகுதி 1640இல்
கட்டி முடிக்கப்பட்டது. இதுவே ‘புனித ஜார்ஜ் கோட்டை’ என
அழைக்கப்படலாயிற்று. கி.பி. 1641இல் இக்கோட்டை சோழ
மண்டலக் கரையில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின்
தலைமையிடமாயிற்று. (இதற்கு முன் மசூலிப்பட்டினமே
அவர்களது தலைமையிடமாக இருந்தது.) கி.பி. 1640முதல்
1643வரை கோகன் என்பவரும் அவரை அடுத்து பிரான்சிஸ்டே
(1643-44)யும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்தைக்
கவனிக்கப் புனித ஜார்ஜ் கோட்டையில் ஆங்கில அதிகாரிகளாகப்
பணியாற்றினர். இவர்களைத் தொடர்ந்து பல ஆங்கில அதிகாரிகளும்,
ஆளுநர்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் பதவி வகித்தனர்.
வேங்கடப்பரிடமிருந்து
பிரான்சிஸ்டே கி.பி. 1639இல் பெற்ற
மீனவர் வாழ்ந்த கடற்கரைக் கிராமம், வேங்கடப்பரின் தந்தை
சென்னப்பர் என்பவர் பெயரால் சென்னப்பட்டினம் என
அழைக்கப்படலாயிற்று என்பர். ஆங்கிலேயர் பெற்ற
சென்னப்பட்டினத்துக்கு வடக்கில் மதராஸ் பட்டினம் என்ற
இடம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னப்பட்டினத்திற்கும்,
மதராஸ் பட்டினத்திற்கும் இடையில் இருந்த பகுதியில் புதிய
கட்டடங்களும் தெருக்களும் ஏற்பட்டபின் இரு இடங்களும்
ஒன்றாயின என்றும், ஒன்றாகிய பகுதியே ஆங்கிலேயரால்
மதராஸ் பட்டினம் என்றும் தமிழக மக்களால் ‘சென்னைப்பட்டினம்’
எனவும் அழைக்கப்படலாயிற்று என்றும் கருதப்படுகிறது.
|