பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்335

அரண்மனையிலிருந்து சிறிது தொலைவில் உமறுப்புலவர்
‘தர்கா’ உள்ளது. உமறுப்புலவர் ஒர் இஸ்லாமியக்கவி ஆவார்.
எட்டையாபுர அரசவைக் கவியாக விளங்கினார். ‘சீறாப்புராணம்’
பாடிப் புகழ் பெற்றார். நபிகள் நாயகத்தின் அறவாழ்வை 5,027
திருவிருத்தங்களில் சிறந்த காப்பியமாக இந்நூலில் பாடினார்.
இஸ்லாமியக் கவிஞரால் இயற்றப்பட்ட முதல் சிறந்த தமிழ்
நூல் ‘சீறாப்புராணம்’ ஆகும். உமறுப்புலவர் அடங்கிய இடத்தில்
‘தர்கா’ உள்ளது.

இந்திய வரலாற்றில் எட்டையாபுரம் என்றும்
நினைக்கப்படுவதற்கு முக்கிய காரணம், இவ்வூர் கவி
சுப்பிரமணிய பாரதியாரின் பிறப்பிடமாகும். பாரதியாரின்
இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் 1882ஆம்
ஆண்டு பிறந்தார். இவர் பெற்றோர்கள் சின்னசுவாமி ஐயரும்,
லட்சுமி அம்மாளும் ஆவர். சிறுவயது முதல் கவிதை பாடுவதில்
இவர் ஆர்வம் காட்டினார். 11ஆவது வயதில் (1893) இவரது
கவிதைத்திறன் கண்டு எட்டையாபுர அரசவைப் புலவர்கள்
இவருக்குப் ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினர். 1894முதல்
1897வரை திருநெல்வேலி இந்துக் கல்லுாரி உயர்நிலைப்பள்ளியில்
படித்த இவர் 1897இல் செல்லம்மாளை மணந்தார். தந்தை
காலமானபின் (1898) காசி சென்று சமஸ்கிருதம் பயின்றார்.
நான்காண்டுகள் கழித்து அங்கிருந்து திரும்பினார். 1904ஆம்
ஆண்டு சில மாதங்கள் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில்
தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின் ‘சுதேசமித்திரன்’
என்ற தினசரிப்பத்திரிகையின் துணை ஆசிரியராகவும்,
அதன்பின் ‘சக்ரவர்த்தினி’ என்ற மாத இதழின்
ஆசிரியராகவும் பணியாற்றினார். 1907 ஆம் ஆண்டு சூரத்தில்
நடைபெற்ற இந்தியத் தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில்
கலந்துகொண்டார். பின் சில ஆண்டுகள் புதுச்சேரியில்
வாழ்ந்தார். ‘இந்தியா’ என்ற வார இதழை வெளியிட்டார்.
1918ஆம் ஆண்டு புதுச்சேரியை விட்டுச் சென்றார்.
கடையத்தில் ஓராண்டைக் கழித்த இவர் பின் சென்னை
சென்று அங்குச் சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1921,
ஜுலையில் திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதி கோவில்
யானைக்குப் பாரதியார் தேங்காய் அளித்தபொழுது யானை
பாரதியைத் தள்ளிவிட்டது.