பக்கம் எண் :

346தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

போக்குவரவு தொடங்கிற்று. 1981ஆம் வருட கணக்குப்படி
இந்நகரின் மக்கள் தொகை (நகர்ப்புறப் பகுதிகள்
இணைந்தது) 3,24,034 ஆகும்.

நெல்லையப்ப சுவாமி கோவில்

திருநெல்வேலி நகரின் நடுவில் நெல்லையப்ப சுவாமி
கோவில்
உள்ளது. இது தமிழகத்தின் பழம்பெரும்
சிவவழிபாட்டுத் தலம் ஆகும்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மதுரைப் பாண்டிய
மன்னன் நின்ற சீர் நெடுமாறன் (கூன் பாண்டியன்) நெல்லையப்ப
சுவாமி கோவிலின் பெரும்பகுதியைக் கட்டினார் எனப்படுகிறது.
இக்கோவிலின் கொடிமரம் கி.பி. 1155இல் பிரதிஷ்டை
செய்யப்பட்டது குலசேகர பாண்டியன், சேர, சோழ, ஓய்சள
மன்னர்களை வென்று பெற்ற பொருள்களைக் கொண்டு, சுவாமி
கோவில் பெரிய சுற்று வெளி மதிலை அமைத்துள்ளார். சுவாமி
சந்நிதியையும், அம்மன் சந்நிதியையும் இணைக்கும் சங்கிலி
மண்டபத்தை
க் கி.பி. 1647இல் வடமலையப்ப பிள்ளை என்ற
சைவப் பெரியார் கட்டினார். நந்தி மண்டபம் கி.பி. 1654இல்
சிவந்தியப்ப நாயக்கரால்
அமைக்கப்பெற்றது. அம்மன் கோபுரம்
1726இல் கட்டப்பட்டது. ஆறுமுக நயினார் சந்நிதியைப்
பிள்ளையன் என்பவர் அமைத்தார்.

திரிசிரபுரம் சிவராம காசியாபிள்ளை, தளவாய் அழகப்ப
முதலியார், திருமலையப்ப பிள்ளை, திருவாவடுதுறை ஆதீனத்தார்,
தருமபுர ஆதீனத்தார், வேங்கட கிருஷ்ண முதலியார், தானப்ப
முதலியார் இன்னும் பலரின் திருப்பணிகளை இக்கோவில்
கொண்டுள்ளது. இக்கோவிலின் சிறந்த குடமுழுக்கு விழா
1974ஆம் ஆண்டு நடைபெற்றது.

கருவறையில் நெல்லையப்பர் லிங்க வடிவில் காட்சி
தருகிறார். அம்மன் காந்திமதியம்பாள் எனப்படுகிறார்.
ஈஸ்வரனின் கருவறைக்கு வடக்கில் நெல்லைக் கோவிந்தர்
என்ற விஷ்ணுவின் சந்நிதி உள்ளது. பெருமாள் துயில் கொண்ட
நிலையில் காட்சியளிக்கிறார்.