கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், முத்துக்குமாரசுவாமி
கோவில் ஆகியவையும், வடபழனியிலுள்ள முருகன் கோவில்,
பெசன்ட் நகரிலுள்ள அஷ்டலட்சுமி கோவில் ஆகியவையும்
சென்னை நகரிலுள்ள இதர சில முக்கியக் கோவில்களாகும்.
திருமுல்லைவாயில்
திருமுல்லைவாயிலில்
(ஆவடிக்கு அருகில்) ஒரு சிறந்த
சிவாலயம் உள்ளது. இங்குள்ள இறைவன் மாசிலாமணீஸ்வரர்
ஆவார். இறைவி கொடியிடைநாயகி எனப்படுகிறார். கருவறை
மீது எழுப்பப்பட்டுள்ள விமானம் அழகிய தோற்றத்தைக்
கொண்டுள்ளது. கருவறையின் வெளிச் சுவர்களில்
தெய்வங்களின் திருவுருவங்கள் பல உள்ளன. தஞ்சை
மாவட்டத்தில் திருமுல்லைவாயில் என்ற இடம் இருப்பதால்
சென்னை அருகிலுள்ள இத்திருமுல்லைவாயில்
‘வடதிருமுல்லைவாயில்’ எனப்படுகிறது.
திருவான்மியூர்
சென்னையிலிருந்து 10 கி.மீ தொலைவில் திருவான்மியூர்
உள்ளது. இங்கு மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. பல்லவர்
காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோவில் பிற்காலச் சோழ
மன்னர்களின் திருப்பணிகளையும் கொண்டுள்ளது. கங்கை
கொண்ட சோழன் எனப்படும் முதலாம் இராஜேந்திரன்
(1012-44) ஆட்சிக் காலத்தில் இக்கோவில் கருங்கல்லால்
திருப்பணி செய்யப்பட்டது. இக்கோவில் அப்பர்,
சம்பந்தர்
ஆகியோரின் பாடல் பெற்றுள்ளது. இக்கோவிலின் அம்மன்
திரிபுரசுந்தரி ஆவார். இக்கோவிலிலுள்ள 18 தூண்
மண்டபத்தின் நடுவிலுள்ள நான்கு கற்றூண்களில்
குதிரைகள்மீதும் யாளிகள்மீதும் வீரர்கள் அமர்ந்திருக்கும்
நிலையிலுள்ள சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை. இவை
விஜயநகர அரசுக் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்
என்று கருதப்படுகிறது.
திருவான்மியூருக்கு அருகில்
வேளச்சேரியில்
தண்டீஸ்வரமுடைய நாயனார் என்ற சிவனுக்குரிய கோவில்
உள்ளது.
|