பக்கம் எண் :

44தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

ஸ்ரீ திருநந்தித் தேவர், ஸ்ரீபிரஹ்ம தேவர், ஸ்ரீ பத்திரகிரியார்,
ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீதும்புரு ரிஷி, ஸ்ரீ சிந்தாமணி விநாயகர்,
ஸ்ரீ பட்டினத்தடிகள், ஸ்ரீ நாரத ரிஷி, ஸ்ரீ சனத்குமாரர்,
ஸ்ரீ சனாதனர், ஸ்ரீ சனந்தனர், ஸ்ரீ சனகர் என்பன
அப்பெயர்கள். இத்தூண்கள்போல் தமிழகத்தில் வேறு
எங்கும் இல்லை எனலாம்.

பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்தவர்,
இவர் சிறந்த கடல் வணிகர் என்றும், சிவன் மீது பற்றுக்கொண்டு
தமது செல்வத்தைத் துறந்து ஞானியானார் என்றும் கூறப்படுகிறது.
இவரது பாடல்கள் பாமரரும் படித்து இன்புறும்படி எளிமையாக
உள்ளன. இவர் திருவொற்றியூரிலுள்ள சிவனை வழிபட்டுப்
பாடல்களை இயற்றினார். இவர் அடங்கிய இடம்
திருவொற்றியூர்க் கடற்கரைக்கு அருகில் உள்ளது.

திருவேற்காடு

சென்னை நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில்
திருவேற்காடு உள்ளது. திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து
1 கி.மீ. தொலைவில் வேதபுரீசுவரர் கோவில் உள்ளது. இது
புகழ்மிக்க சிவ வழிபாட்டுத் தலம் ஆகும். இக்கோவிலிலுள்ள
அம்மன் பாலாம்பிகை எனப்படுகிறார். இக்கோவில் இரண்டாம்
இராஜேந்திர சோழன் காலத்திற்கும் முந்திய காலத்ததாக இருக்க
வேண்டும் என்று கருதப்படுகிறது. சைவ சமய வரலாற்றில்
இக்கோவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுவாமியும், அம்மனும்
கைலாயத்தில் நிகழ்ந்த மணக்கோலத்தில் அகத்தியருக்கு
இத்தலத்தில் காட்சியளித்ததாகப் புராணச் செய்தி உள்ளது.
(இத்தலம் போன்று தஞ்சைக்கு அருகிலுள்ள வேதாரண்யத்திலும்
கோவில் உள்ளதால், திருவேற்காடு ‘வடவேதாரண்யம்’
என்றும் அழைக்கப்படுகிறது.)

இக்கோவில் ‘உண்ணாழி’யின் கட்டட அமைப்பு சிறப்பு
வாய்ந்ததாகும். உண்ணாழியின் புறச்சுவர்களில் காணப்படும்
மாடங்களில் உள்ள சிற்பங்கள் மிகவும் அழகாகவும்,
சோழர்களுக்கு உரிய கலையம்சத்திலும் உள்ளன. கருவறைச்
சுவர்களிலும், நடுப்பிரகாரச் சுவர்களிலும் ஏராளமான
கல்வெட்டுகள் உள்ளன.