கி.பி. 1826இல் பரிசுத்த திரித்துவ ஆலயம்
(The Holy Trinity
Cathedral) கட்டப்பட்டது. பீட்டைட்
(Rev. Pettite) என்ற
பெரியாரால் இவ்வாலயத்திற்குக் கி.பி. 1855ஆம் வருடம் 47.3
மீட்டர் உயரமுள்ள கோபுரம் எழுப்பப்பட்டது.
இவ்வாலயத்தின்
கட்டடப் பகுதிகளுக்கு அடிக்கல் போடப் பயன்படுத்துவதற்காகப்
பாளையங்கோட்டை நகரின் அழிந்த கோட்டைப்
பகுதியிலிருந்து
வேண்டிய கருங்கற்களை எடுத்துக் கொள்வதற்கு
மாவட்ட
ஆட்சியாளரிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது. 1869ஆம் வருடம்
தாமிரவருணியில் ஏற்பட்ட வெள்ளம் இவ்வாலயத்தைச்
சேதப்படுத்தியது. எனவே, இவ்வாலயம் 1876இல் புதுப்பித்துக்
கட்டப்பட்டது. கி.பி. 1932இல் இவ்வாலயம் மேலும்
விரிவுபடுத்தப்பட்டது. இது 1940ஆம் ஆண்டுமுதல் பேராலயமாக
விளங்குகிறது.
தூய சவேரியார் பேராலயம்
கத்தோலிக்கக்
கிறித்தவர்களின் புகழ்மிக்க ஆலயமாகப்
பாளையங்கோட்டையில் திகழ்வது ‘தூய சவேரியார் பேராலயம்’
ஆகும். கி.பி. 1838ஆம் ஆண்டு பாளையங்கோட்டைப் பங்கு
சேசு சபையாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சேசு சபையைச் சேர்ந்த
குருக்கள் தூய சவேரியார் ஆலயத்தைத் தோற்றுவிப்பதில் அதிக
முயற்சி எடுத்தனர். 1957-59ஆம் ஆண்டு காலத்தில் இவ்வாலயம்
தந்தை அருளானந்தம் முயற்சியால் பெரிதும் விரிவுபடுத்திக்
கட்டப்பட்டது.
பாளையங்கோட்டையிலுள்ள மற்றொரு கத்தோலிக்கக்
கிறித்தவ ஆலயம் புனித அந்தோணியார் ஆலயம் ஆகும்.
கிருஷ்ணாபுரம்
திருநெல்வேலியிலிருந்து 13 கி.மீ. தொலைவில்
(திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில்) கிருஷ்ணாபுரம்
என்ற சிற்றூர் உள்ளது. இச்சிற்றூரில் நமது பண்பாட்டின்
பெருமையைக் கூறும் வெங்கடாசலபதி கோவில் உள்ளது.
|