பக்கம் எண் :

352தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

கிருஷ்ணாபுரம் கோவில் ஒரு வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும்.
மதுரை நாயக்க மன்னர் கிருஷ்ணப்பரால் (1564-1572) இக்கோவில்
கட்டப்பட்டது. கிருஷ்ணப்பரின் மகன் வீரப்பரின் திருப்பணிகளும்
இங்கு உள்ளன. கிருஷ்ணப்பர் நினைவாக இங்குள்ள கோவிலை
அடுத்த ஊர் கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது.

இக்கோவிலிலுள்ள ‘வீரப்பர் மண்டபமும், அரங்க
மண்டபமும் உன்னத சிற்பங்களைக் கொண்டுள்ளன. வீரப்பர்
மண்டபத்தின் முன்னுள்ள அர்ஜு னன், குறத்தி
ராஜகுமாரனைத் தூக்கிச் செல்லுதல், நாடோடிப் பெண்ணின்
நடனம், கர்ணன், குறவன் அரசகுமாரியைத் தூக்கிச்
செல்லுதல், தேவகன்னியின் நடனம்
ஆகிய ஆறு கற்றூண்
சிலைகள் யாவரும் பார்த்து வியக்கும்படியாக உள்ளன. அரங்க
மண்டபத்திலுள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன், புருஷாமிருகம்,
தருமர் ஆகிய சிற்பங்கள் உள்ள கற்றூண்கள், நடனமாது,
ரதிதேவியும் தோழிகளும், வீரபத்திரன் ஏவலாளர் ஆகிய
சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பியின் கைவண்ணத்தைக்
காட்டுகின்றன. பீமன், புருஷாமிருகம், தருமர் உள்ள கற்றூணின்
ஒரு பகுதியில் யானைக்கும், காளைக்கும் ஒரே முகம்
இருக்கும்படியாகச் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பது விநோதமாக
உள்ளது.

கிருஷ்ணாபுரச் சிற்பங்கள் நமது அரிய கலைச்
செல்வங்களாகும்.

நாங்குநேரி

திருநெல்வேலியிலிருந்து 29 கி.மீ. தொலைவில் (நாகர்
கோவில் சாலையில்) நாங்குநேரி உள்ளது. இங்குப் புகழ்பெற்ற
வைணவ ஆலயம் உள்ளது. இவ்வாலயத்திலுள்ள சிவிலி
மண்டபம்
ஓர் அரிய கலைப்படைப்பாகும்.

நாங்குநேரியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் செண்பகராம
நல்லூர்
உள்ளது. இங்குள்ள சிவன் கோவிலில் காணப்படும்
இசைத்தூண்
தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.