பக்கம் எண் :

382தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

பத்மனாபபுரக் கோட்டையின் வடமேற்கு மூலையில்
இராமசாமி கோவில் உள்ளது. வில்லையும், அம்பையும்
தாங்கியுள்ள இராமர் இக்கோவிலின் மூலவராகக்
காட்சியளிக்கிறார். இக்கோவிலின் சிறப்பான பகுதி அதன்
உட்பிரகாரத்தைச் சுற்றிச் செதுக்கி வைக்கப்பெற்றுள்ள
இராமாயண நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் கற்பலகைகள்
ஆகும். இராமாயணக் கதை முழுவதும் 45 பலகைகளில்
சித்திரிக்கப்பட்டுள்ளன. மர வேலைப்பாடுமிக்க இவை
சிறந்த கலைக்கருவூலங்களாகும்.

அரண்மனைக் கோட்டைப் பகுதியிலுள்ள மற்றொரு
கோவில் நீலகண்ட சுவாமிக்குரியது. இக்கோவிலின் இறைவன்
கல்குளம் மகாதேவர் எனப்பட்டார். இக்கோவிலிலுள்ள அம்மன்,
திருமலை மன்னரால் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டதாகக்
கூறப்படுகிறது. திருமலை மன்னரின் திருவாங்கூர்ப்
படையெடுப்பிற்குப்பின் (கி.பி. 1634) இக்கோவிலின் மூலவர்
நீலகண்ட சுவாமி எனவும், அம்மன் ஆனந்தவல்லி எனவும்
அழைக்கப்பட்டனர் எனப்படுகிறது.

பத்மனாபபுர அரண்மனையிலிருந்து 1 கி.மீ தொலைவில்
உதயகிரிக் கோட்டை உள்ளது. கி.பி. 1600இல் கட்டப்பட்டிருந்த
கோட்டையை மார்த்தாண்டவர்மன் (1729-58) என்ற
திருவிதாங்கூர் மன்னர் புதுப்பித்துக் கட்டினார். (1741-44).
இக்கோட்டை கட்டுவதற்கு டி லனாய் என்ற டச்சுத் தளபதி
உதவினார். கி.பி. 1741இல் நடந்த குளச்சல் போரில்
டச்சுக்காரர்களைத் தோற்கடித்த மன்னர் மார்த்தாண்டவர்மன்
24 ஐரோப்பியர்களைச் சிறைப் பிடித்தார். அவர்களில் ஒருவர்
டி லனாய் ஆவார். டி லனாயைத் தம் தளபதியாக்கிக் கொண்டார்.
டி லனாயின் புகழுக்கு ஒரு சான்றாக உதயகிரிக் கோட்டை உள்ளது.
டி லனாய் அடங்கியுள்ள கல்லறை இக்கோட்டையின் ஒரு பகுதியில்
உள்ளது.

சுசீந்திரம்

நாகர்கோவிலிலிருந்து 6 கி.மீ. தொலைவில் கன்னியாகுமரி
செல்லும் சாலையில் சுசீந்திரம் உள்ளது. சுசீந்திரத்தின்