பல்லவர் ஆட்சிக்குப் பின் காஞ்சி
அபராஜிதன் என்ற கடைசிப் பல்லவ மன்னனை
ஆதித்தன் (871-907) என்ற பிற்காலச் சோழ மன்னன்
வென்றபொழுது காஞ்சிபுரமும் பல்லவ நாடும் பிற்காலச்
சோழர் ஆட்சியின்கீழ் வந்தது. தொண்டை நாடு ‘ஜெயங்கொண்ட
சோழ மண்டலம்’ என்ற பெயரைப் பெற்றது. கி.பி. 10ஆம்
நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுவரை காஞ்சிபுரம்
பிற்காலச் சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. சோழப்
பேரரசின் இரண்டாவது தலைநகராகக் காஞ்சிபுரம் விளங்கியது.
சோழ மன்னர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்கள் தொண்டை
மண்டலத்தை ஆட்சி புரிந்தனர். கி.பி. 14ஆம் நூற்றாண்டு
முதல் 17ஆம் நூற்றாண்டுவரை காஞ்சிபுரம் விஜயநகர
மன்னர்கள் ஆட்சியின்கீழ் வந்தது. கிருஷ்ணதேவராயரின்
பிரதிநிதி வீரவசந்தராயர் தமது ஆட்சிப் பகுதிக்குக்
காஞ்சிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டார். மொகலாய
மன்னர் ஒளரங்கசீப் காலத்தில், கர்நாடகத்தின் பல பகுதிகள்
வெல்லப்பட்டு அவை கர்நாடக நாவாபின் ஆட்சியின்கீழ் வந்தன.
எனவே ஆர்க்காட்டில் ஆட்சிபுரிந்த கர்நாடக நவாபின்
ஆட்சியில் காஞ்சிபுரம் சிறிது காலம் இருந்தது.
கி.பி. 1760இல் காஞ்சிபுரத்தை ஆர்க்காட்டு நவாபிடமிருந்து
ஆங்கிலேயர் பெற்றனர். இரண்டாவது மைசூர்ப் போரின்பொழுது
(1780) மைசூர் மன்னர் ஹைதர்அலி மேஜர் ஹெக்டர்
மன்றோவைத் தோற்கடித்துக் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினார்.
ஆனால், போரின் இறுதியில் ஆங்கிலேயரே இந்நகரை
வென்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு
மாவட்டத்தின் முக்கிய நகரமாகக் காஞ்சிபுரம் விளங்கியது.
1968ஆம் ஆண்டு முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின்
தலைமையிடமாகக் காஞ்சிபுரம் விளங்குகிறது.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் ‘துபாஷாக’
இருந்த பச்சையப்ப முதலியார் (1754-1794) தமது
பெருஞ்செல்வத்தைக் கல்விக்கும், கோவில்
திருப்பணிகளுக்கும் செலவிட்டார். இவரது அறக்கட்டளை
பல காஞ்சிபுரத்தில் உள்ளன.
|