பக்கம் எண் :

54தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

தமிழகத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய அறிஞர்
அண்ணா (1909-1969) பிறந்த ஊர் காஞ்சிபுரம் ஆகும்.
காஞ்சிபுரத்தில் இவர் வாழ்ந்த இல்லம் 1980 ஆம் ஆண்டு
முதல் தமிழக அரசின் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டுள்ளது.

இந்நாளில் பட்டு நெசவிற்குக் காஞ்சிபுரம் புகழ் பெற்று
விளங்குகிறது.

காஞ்சிபுரத்திலுள்ள கோயில்கள்

சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய நான்கு
சமயங்களும் காஞ்சிபுரத்தின் வரலாற்றில் சிறப்புமிக்க இடத்தைப்
பெற்றுள்ளன. கி.பி. முதலாம் நூற்றாண்டில் காஞ்சியில் சிறப்புடன்
விளங்கிய பௌத்தம் பிற்காலத்தில் சிறப்பிழந்தது. சமணமும்
வீழ்ச்சியுற்றபின் சைவம், வைணவம் ஆகிய இரண்டும் இன்றும்
காஞ்சியில் சிறப்புடன் விளங்குகின்றன. காஞ்சிபுரம் ஒரு
‘கோவில் நகரமாகும்’.
காஞ்சிபுரத்தில் நமது பண்பாட்டின்
சின்னங்களாக விளங்கும் கோயில்கள்பற்றி இனிச் சிறிது காணலாம்.

காஞ்சிபுரத்திலுள்ள முக்கிய சிவ வழிப்பாட்டுத் தலங்கள்

ஏகாம்பரேஸ்வரர் கோவில் :

பெரிய காஞ்சிபுரம் அல்லது ‘சிவகாஞ்சி’ எனப்படும்
நகர்ப்பகுதியில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் என்ற புகழ்மிக்க
சிவன் கோவில் உள்ளது. காஞ்சிபுரத்திலுள்ள மிகப்பெரிய
கோவில்
என இதனைக் கருதலாம். பல்லவ மன்னர்கள்,
சோழ மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோரின்
திருப்பணிகளை இக்கோவில் கொண்டுள்ளது. சோழ
மன்னர்களில் மூன்றாம் குலோத்துங்க சோழனும் விஜயநகர
மன்னர்களில் கிருஷ்ணதேவராயரும் இக்கோவிலின் வளர்ச்சிக்கு
முக்கியத் திருப்பணிகள் புரிந்துள்ளனர். இக்கோவிலின்
இராஜகோபுரம் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாகும்
(1509). தமிழ்நாட்டிலுள்ள, அழகிய பெரிய கோபுரங்களில்
இதுவும் ஒன்றாகும். இக்கோவிலின் வெளிப்பகுதியிலுள்ள
கற்சுவர்களும் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.