பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்55

கோவிலின் ‘கல்யாண மண்டபமும்’ விஜயநகர மன்னர்கள் காலப்
பணியாகும். வள்ளல் பச்சையப்ப முதலியாரின் (1754-1794)
திருப்பணியும் இக்கோவிலில் உள்ளது.

கருவறையில் ‘ஏகாம்பரர்’ லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
இக்கோவிலின் இறைவி ‘ஏலவார்குழலியம்மை’ எனப்படுகிறார்.
இக்கோவிலிலுள்ள ‘மாமரம்’ புனிதமாகக் கருதப்படுகிறது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
ஆகிய சைவ சமயாச்சாரியார்கள் நால்வரும் இக்கோவிலைப்
பற்றிப் பாடியுள்ளனர். பட்டினத்தார் இக்கோவிலைப்பற்றித்
‘திரு ஏகாம்பர மாலை’யில் பாடியுள்ளார்.

கோவிலின் ஒரு பகுதியில் விஷ்ணுவின் சந்நிதி உள்ளது.
இது சைவ-வைணவ சமய ஒருமைப்பாட்டிற்கு ஒரு சின்னமாக
உள்ளது. கோவிலின் மற்றொரு பகுதியில் நடராசர் சந்நிதி உள்ளது.

ஆயிரங்கால் மண்டபமும், உட்பிரகாரத்திலுள்ள
கற்றூண்களும் கட்டடக்கலைச் சிறப்புமிக்கவையாக உள்ளன.
1008 சிறிய லிங்கங்களின் உருவங்களைக் கொண்டுள்ள
பெரிய லிங்கம் ஒன்றும் இக்கோவிலில் உள்ளது.

இரண்டாம் மைசூர்ப் போர் நடைபெற்றபொழுது
ஆங்கிலேயர்களால் இக்கோவில் ஒரு படைத்தலமாகப்
பயன்படுத்தப்பட்டது.

கைலாசநாதர் கோயில்

காஞ்சிபுரத்திலுள்ள மிக்க பழமைமிக்க கோவில்
கைலாசநாதர் கோவில்
ஆகும். இக்கோவில் காஞ்சிபுரம்
நகரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோவில்
பல்லவ மன்னன் இராஜசிம்மனால் (கி.பி.700-720) கட்ட
ஆரம்பிக்கப்பட்டு அவரது மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால்
கட்டி முடிக்கப்பட்டது.

இது புகழ்மிக்க சிவாலாயம் ஆகும். இதைக் கல்வெட்டுகள்
‘இராஜசிம்மேச்சரம்’ எனக் கூறுகின்றன. இக்கோவிலில்
சுமார் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடந்து
வருகிறது. இக்கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டதாகும்.