பக்கம் எண் :

58தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

காஞ்சிபுரத்தில் எந்தச் சிவன் கோவிலிலும் அம்பிகைக்கு
எனத் தனியாகக் கருவறை இல்லை. காஞ்சி காமாட்சியம்மன்,
காஞ்சி நகர் முழுமைக்கும் ஒப்பற்ற பெண் தெய்வமாகக்
காட்சியளிக்கிறார்.

காமாட்சியம்மன் கோவில் அருகில் ‘குமரக் கோட்டம்’
என்ற முருகன் கோவில் உள்ளது.

‘கோவில் நகரம்’ எனப்படும் காஞ்சியில் முன்
கூறப்பட்டுள்ள ஆலயங்களைத் தவிர மேலும் பல சிவாலயங்கள்
உள்ளன. பல சிவாலயங்களைக் கட்டிய பல்லவ மன்னர்கள்
புகழ்மிக்க வைணவ ஆலயங்களையும் இங்கு அமைத்துள்ளனர்.
இதனால் சைவம், வைணவம் ஆகிய இந்து சமயத்தின் இரு
பிரிவுகளுக்கும் சிறந்த மையமாகக் காஞ்சிபுரம் உள்ளது.
சிவாலயங்கள் மிகுதியாக இருந்த நகர்ப்பகுதி சிவகாஞ்சி, எனவும்,
வைணவ ஆலயங்கள் மிகுதியாக இருந்த பகுதி விஷ்ணுகாஞ்சி
எனவும் அழைக்கப்படலாயிற்று.

காஞ்சிபுரத்திலுள்ள முக்கிய வைணவ
வழிபாட்டுத் தலங்கள்

வைகுந்தப் பெருமாள் கோவில்

காஞ்சி நகரிலுள்ள வைகுந்தப் பெருமாள் ஆலயம் தமிழ்
நாட்டிலுள்ள பழமைமிக்க வைணவ ஆலயங்களில் ஒன்றாகும்.
பரமேஸ்வர வர்மன் என்ற இரண்டாம் நந்திவர்ம பல்லவ மன்னனால்
(கி.பி. 730-795) இக்கோவில் கட்டப்பட்டது. இது திருமங்கை
ஆழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும். ‘பரமேசுவர விண்ணகரம்’
என இக்கோவில் அழைக்கப்படுகிறது.

கருவறை மூன்று அடுக்குகளைக்கொண்ட விமானத்தைக்
கொண்டுள்ளது. இங்கு இறைவன் அமர்ந்த நிலை, நின்ற நிலை,
சயன நிலை
ஆகிய மூன்று நிலைகளில் காட்சியளிக்கிறார்.
(இது போன்று உத்திரமேரூர், திருகோஷ்டியூர், மதுரை
கூடலழகர் பெருமாள் கோவில் ஆகிய இடங்களிலும் உள்ளன.)
திருமாலின் பல அவதாரங்களைக் காட்டும் அழகிய சிற்பங்கள்
இக்கோவிலில் உள்ளன. தாயார் ஸ்ரீவைகுந்தவல்லி