பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்59

எனப்படுகிறார். வைகுண்ட ஏகாதசியன்று இவ்வாலயத்திற்கு
ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.

இக்கோவிலின் திருச்சுற்றில் காணப்படும் சுவர்ச் சிற்பத்
தொகுதிகள் மணற்பாங்கான கல்லால் ஆக்கப்பட்டுள்ளன;
ஓரளவு சேதமடைந்த நிலையில் உள்ளன. இச்சிற்பத் தொகுதிகள்
பல்லவ அரசர்களின் வரலாற்றைச் சிற்ப வடிவில் சித்திரிக்கின்றன.
பல்லவ மன்னர்களின் ஆட்சி முறை, போர், அக்காலச் சமயம்,
சமூக வாழ்க்கை ஆகிய யாவும் இச்சிற்பங்களிலிருந்து
அறியப்படுகின்றன. இச்சிற்பங்கள் அரிய கலைப் படைப்புகள்
ஆகும்.

பல்லவ மன்னர்களின் கட்டட மற்றும் சிற்பக் கலைத்
திறனுக்கு வைகுந்தப் பெருமாள் ஆலயம் ஒரு சிறந்த நினைவுச்
சின்னமாக விளங்குகிறது. இதனை நன்முறையில் காத்திடுவது
நமது கடமையாகும்.

வரதராஜப்பெருமாள் கோவில்

காஞ்சிபுரம் நகரிலிருந்து 3 கி.மீ. தொலைவில்
‘சின்னக் காஞ்சிபுர’த்தில் வரதராஜப்பெருமாள் கோவில்
உள்ளது. பல ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற கோவிலாகும்.
பல்லவ, சோழ, விஜயநகர மன்னர்களின் திருப்பணிகளை
இக்கோவில் கொண்டுள்ளது.

பெருமாளின் சந்நிதி அத்திகிரி என்ற சிறு குன்றின்மீது
உள்ளது. பெருமாள் நின்ற நிலையில் காட்சி தருகிறார். தாயார்
பெருந்தேவி எனப்படுகிறார். இக்கோவிலில் யோக நரசிம்மருக்கு
ஒரு சந்நிதி உள்ளது. அத்திகிரியின்கீழ் உள்ள குகையில்
ஸ்ரீ அழகிய சிங்கரும், ஸ்ரீ ஹரிதார்த்த தேவியும்
காட்சி
தருகின்றனர்.

இக்கோவிலில் அனந்த தீர்த்தம் என்ற புனிதக் குளம்
உள்ளது. இக்குளத்திலுள்ள நான்கு கால் மண்டபத்தில் நீருக்கு
அடியில் ஒரு வெள்ளிப் பெட்டியினுள் ஸ்ரீ அத்தி வரதர்
வைக்கப்பட்டிருக்கிறார். நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை
திருக்குளத்தின் நீர் இறைக்கப்பட்டு ஸ்ரீ அத்திவரதர் காட்சிக்கு