பக்கம் எண் :

60தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

வைக்கப்படுகிறார். (மூன்று ஆண்டுகளுக்குமுன் ஸ்ரீ அத்திவரதரின்
அனந்த தீர்த்தக் காட்சி நடைபெற்றுள்ளது.)

விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட அழகிய
கோபுரங்கள் இக்கோவிலில் உள்ளன. சக்கரத்தாழ்வார் சந்நிதி
தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. கோவிலிலுள்ள தங்க,
வெள்ளிப் பல்லிகள்
புராண வரலாற்றைக் கொண்டுள்ளன.

அனந்த தீர்த்தத்தின் அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம்
இக்கோவிலின் கலைக்கருவூலம் ஆகும். இம்மண்டபம்
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால்
கட்டப்பட்டதாகும். இம்மண்டபம் விஜயநகர அரசுச் சிற்பிகளின்
அற்புத உளி வேலைப்பாட்டில் உருவான உன்னதப் படைப்பு
ஆகும். விஜயநகரக் கலைக்குரிய காட்சிக்கூடமாக இதைக்
கருதலாம், இம்மண்டபத்திலுள்ள கற்றூண்களில்
இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் வரும் பல காட்சிகள்
கல்லில் கதை கூறுபவையாக உள்ளன. தசாவதாரக் காட்சிகள்,
குதிரைமீதமர்ந்துள்ள வீரர்களின் சிற்பங்கள், இதர பல சிற்பங்கள்
ஆகிய யாவும் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. இம் மண்டபத்திலுள்ள
ஒவ்வொரு தூணும் ஒரு கலைக்கருவூலம் ஆகும். மண்டபத்தின்
வெளிப் பகுதியில் நான்கு மூலைகளில் காணப்படும்
கல்சங்கிலிகள்,
விஜயநகர சிற்பியின் கைவண்ணத்தைக்
காட்டுகின்றன.

வரதராஜபெருமாள் கோவிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபம்
விஜயநகர மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஒரு உன்னத
கலைச்செல்வமாகும்.

கோவிலின் மேல்திருச்சுற்றில் விஜயநகர காலத்து
ஓவியங்கள் உள்ளன. இங்கு கண்ணனுடைய திருவிளையாட்டுகள்
பல அழகிய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கிளியின்மேல்
ரதிதேவி அமர்ந்துள்ள காட்சி, ரதியும் மன்மதனும் உள்ள காட்சி
ஆகியவை சிறப்புமிக்கவை. இவ் ஓவியங்கள் அச்சுத
தேவராயர்
காலத்தவையாக இருக்கலாம் என்று
கருதப்படுகிறது.

மேற்கூறிய இரு வைணவ ஆலயங்களைத் தவிரக்
காஞ்சிபுரத்தில் மேலும் புகழ்மிக்க வைணவ ஆலயங்கள்
உள்ளன. அவைகளில் ஒன்று உலகளந்த பெருமாள் கோவில்
ஆகும்.