கி.பி. 1760இல் நடந்தது. இப்போர் மூன்றாவது கர்நாடகப்
போரின்போது நடந்த ஒரு நிகழச்சியாகும்.
வந்தவாசிப் போரில் பிரெஞ்சுப் படைகளும் ஆங்கிலப்
படைகளும் மோதின. பிரெஞ்சுப் படைகள் லாலி தலைமையிலும்,
ஆங்கிலப் படைகள் சர் அயர்கூட் தலைமையிலும் போரிட்டன.
இப்போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்று பிரெஞ்சுக்காரர்களின்
ஆதிக்கத்தைக் கர்நாடகத்தில் இழக்கச் செய்தனர்.
வந்தவாசி நகரின் மத்தியில் இன்று நாம் காணும்படியாக
ஒரு கோட்டை உள்ளது. இக்கோட்டை விஜயநகர காலத்ததாக
இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்கோட்டையின்
பெரும்பகுதி தற்பொழுது நல்ல நிலையில் உள்ளது. இது
தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையினர்
பாதுகாப்பில் உள்ளது.
ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் என்ற சிவாலயம்,
ஸ்ரீ ரெங்கநாத
சுவாமி என்ற வைணவ ஆலயம் ஆகிய இரு புகழ்மிக்க
ஆலயங்கள் வந்தவாசியில் உள்ளன. வந்தவாசிக்கு அருகில்
சீயமங்கலம் என்ற குகைக் கோவில் உள்ளது. லலிதாங்குரன்
எனப்படும் மகேந்திரவர்ம பல்லவனால் இது அமைக்கப்பட்டது.
திருத்தணி
பண்டைய தொண்டை நாட்டின் ஒரு பகுதியான செங்கல்பட்டு
மாவட்டத்தில் திருத்தணி உள்ளது. (சென்னையிலிருந்து 84 கி.மீ.)
இந்நகரிலுள்ள மலையில் தமிழ் மக்களின் ஒரு முக்கியத் தெய்வமான
முருகனின் கோவில் உள்ளது. முருகனின் ஆறு “படைவீடுகளில்”
திருத்தணி ஐந்தாவது படைவீடாகும். முருகப்பெருமான் தேவர்களின்
துயரம் நீங்கும் பொருட்டுச் சூரபதுமன் என்ற அசுரனுடன் செய்த
பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன்
நிகழ்த்திய சிறு போரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம்
திருத்தணியாகும் என்று புராண வாயிலாக அறியப்படுகிறது.
|