திருத்தணி முருகன் கோவில் தொன்மை வாய்ந்த ஒன்றாகும்.
சைவசமயாச்சாரியர்கள் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசர்
இக்கோவிலைப்பற்றிப் பாடியுள்ளார்.
அருணகிரிநாதர்,
இராமலிங்க அடிகள், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரால்
பாடப்பெற்ற தலம் ஆகும்.
அபராஜிதவர்மன் (கி.பி. 875-893) என்ற பல்லவ
மன்னனின் கல்வெட்டும், முதலாம் பராந்தக சோழன் (907-953)
காலத்துக் கல்வெட்டும் இக்கோவிலில் காணப்படுவதால் இற்றைக்குச்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோவில் சிறந்து விளங்கியது
என்று கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். விஜயநகர மன்னர்கள்
கார்வேட் டி நகர் ஜமீன்தார்கள் ஆகியோரின் திருப்பணிகள்
இக்கோவிலில் உள்ளன. பக்தர்கள் பலரின் நன்கொடைகளினாலும்
இக்கோவில் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும்
தெய்வமாக முருகப்பெருமான் இருப்பதாலும், அவர்
வள்ளியம்மையுடன் அமைதியாக அமர்ந்திருக்கிறார் என்ற
சிறப்பினாலும் இக்கோவிலுக்குப் பக்தர்கள் மிகுதியாக வருகை
தருகின்றனர். ஒவ்வொரு மாதத்திலும் வரும் கிருத்திகை நாள்
இங்குச் சிறப்பு நாளாக உள்ளது. ஆடிக்கிருத்திகையின்
பொழுது இக்கோவிலுக்குப் பல லட்சம் யாத்ரீகர்கள்
வழிபாட்டிற்கு வருகின்றனர்.
முருகப்பெருமான் கோவிலைத் தவிர,
திருத்தணியில்
வீரட்டானேசுவரர் கோவில், ஆறுமுகச்சாமி கோவில்,
விஜயராகவப்
பெருமாள் கோவில் போன்ற பழமைமிக்க
கோவில்களும் உள்ளன.இவை திருத்தணியிலிருந்து 1 கி.மீ.
தொலைவில் நந்தியாற்றின்கரையில்
அமைந்துள்ளன.
வீரட்டானேசுவரர் கோவில்பல்லவ மன்னன்
அபராஜிதவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாகும்.இச்சிறிய
கோவில் முழுவதும் கருங்கல்லினால் ஆனதாகும்.இக்கோவிலின்
விமானம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
|