பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்65

திருத்தணியிலிருந்து 32 கி.மீ. தொலைவில் சோளிங்கபுரம்
உள்ளது. மைசூர் மன்னர் ஹைதர்அலிக்கும் ஆங்கிலேயருக்கும்
இடையில் நடைபெற்ற இரண்டாம் மைசூர்ப் போரின்பொழுது
(கி.பி. 1781) இவ்வூர் ஒரு போர்க்களமாகியது, இங்கு சர் அயர்
கூட்
என்ற ஆங்கிலத் தளபதி ஹைதரைத் தோற்கடித்தார்.
இவ்வூர் புகழ்பெற்ற வைணவ வழிபாட்டுத்தலமாகவும் உள்ளது.

சோளிங்கபுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் மகேந்திரவாடி
குகைக்கோவில் உள்ளது. இது திருமாலுக்குரிய குகைக்கோவிலாகும்.
‘மகேந்திர விஷ்ணுக் கிருகம்’ எனப்படுகிறது. குணபரனான
மகேந்திரவர்ம பல்லவனால் இது அமைக்கப்பட்டது.

திருவாலங்காடு

திருத்தணியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அரக்கோணம்
உள்ளது. அரக்கோணத்திற்கு அருகில் திருவாலங்காடு உள்ளது.
இங்கு ஒரு புகழ்மிக்க சிவாலயம் உள்ளது. இங்குள்ள இறைவன்
ஊர்த்துவதாண்டீசுவரர்
ஆவார். அம்மை வண்டார் குழலி
எனப்படுகிறார். சிவபெருமான் நடனமாடும் ஐந்து சபைகளில்
ஒன்றான இரத்தின சபையை இத்தலம் கொண்டுள்ளது. (மற்ற
நான்கு சபைகள் : சிதம்பரம் கனகசபை, மதுரை இரசித சபை,
திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்ர சபை ஆகும்.)
இத்தலத்தில் சிவபெருமான் காளியுடன் நடனமாடினார் என்றும்,
சக்தியைவிடச் சிவனே ஆற்றல் மிக்கவர் என்பதை
உணர்த்துவதற்காக அவ்வாறு நடனமாடியதாகவும் புராண
வாயிலாக அறியப்படுகிறது. அப்பர், சுந்தரர், சம்பந்தர்
ஆகியோரின் பாடல் பெற்ற தலமாக இது உள்ளது. பதஞ்சலி
முனிவரும், வியாக்ரபாத முனிவரும் இங்கு இறைவனின் நடனக்
காட்சியைக் கண்டதாகப் புராண வாயிலாக அறியப்படுகிறது.

திருத்தணியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் திருவள்ளூர்
உள்ளது. இங்கு ஒரு புகழ்மிக்க வைணவ ஆலயம் உள்ளது.
பல்லவ மன்னர்கள் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டது.
இங்குள்ள பெருமாள் வீரராகவன் என்றும், தாயார் கனகவல்லி
என்றும் அழைக்கப்படுகின்றனர்.