பக்கம் எண் :

68தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

3. மாமல்லபுரம்

சென்னை நகருக்குத் தெற்கில் 56 கி.மீ. தொலைவில்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடற்கரையில்
மாமல்லபுரம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மிக்க பெருமையை
அளிக்கும் இவ்வூர், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு
துறைமுகமாக விளங்கியதாகத் தெரிகிறது. கி.பி. 7ஆம்
நூற்றாண்டில் காஞ்சியில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள்
இவ்வூரின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாயிருந்தனர்.
முதலாம் நரசிம்மவர்மன்
(கி..பி.630-668) என்ற பல்லவ
மன்னன் காலத்தில் இத்துறைமுகம் சிறப்பெய்தியது.
நரசிம்மவர்மனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று ‘மாமல்லன்’
என்பதாகும். இத்துறைமுகப்பட்டினத்திற்கு நரசிம்மவர்மனின்
சிறப்புப்பெயர் வழங்கப்பட்டு ‘மாமல்லபுரம்’ என
அழைக்கப்படலாயிற்று. ‘கடல் மல்லை’, ‘மாமல்லை’
ஆகிப்பின் மாமல்லபுரமாயிற்று. (மகாபலிபுரம் என அழைப்பது
தவறாகும்) சீருடன் பல நூற்றாண்டுகள் விளங்கிய
இத்துறைமுகப்பட்டினம் கடல்நீர் உட்புகுந்ததனால் அழிந்திருக்க
வேண்டும் என்று கருதப்படுகிறது. கடற்கரைக்கு அருகில்
காணப்படும் கருங்கற்கள், கடலில் ஓரளவு புதையுண்டு
காணப்படும் கற்கள் ஆகியவை மேற்கூறிய கூற்றை
உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.

மாமல்லபுரம் இன்று சிற்றூராகத் தோன்றிடினும் இதன்
பெருமை உலகறிந்ததாகும். இப்பெருமைக்குக் காரணம்
இங்குள்ள சிற்பங்களே. இச்சிற்பங்களை ஆக்குவித்தவர்கள்
பல்லவ மன்னர்கள் ஆவர். கற்பாறைகளில், குகைக்கோவில்களை
அமைத்துக் கோயிற்கலையில் ஒரு புதுமையைத் தமிழ்நாட்டில்
புகுத்திய பெருமை முதலாம் மகேந்திரவர்ம பல்லவ
மன்னனைச்
(600-630) சேரும். முதலாம் மகேந்திரவர்மனின்
மகன் முதலாம் நரசிம்மவர்மன் (630-668) தந்தையைப்
பின்பற்றிக் குன்றுகளைக் குடைந்து குகைக்கோவில்களை