பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்7


கி.பி. 1311வரை இஸ்லாமியரின் எவ்விதப் படையெடுப்பும்
நிகழவில்லை. டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின்
(1296-1316) படைத்தளபதியான மாலிக்காபூர் கி.பி. 1310இல்
தக்காணத்தில் படையெடுத்துத் தேவகிரியில் ஆட்சி புரிந்த
யாதவர்கள், வாரங்கல்லில் ஆட்சி புரிந்த காகதீயர்கள் ஆகியோரை
வென்றார். மாலிக்காபூர் துவார சமுத்திரத்தின்மீது படையெடுத்து
ஓய்சளர்களை வென்ற பொழுது மதுரைப் பாண்டிய மன்னன்
மாறவர்மன் குலசேகரனின் இரு மைந்தர்களான சுந்தரபாண்டியன்,
வீரபாண்டியன்
ஆகியோரிடையே பதவிக்காகப் போர் ஏற்பட்டது.
வீரபண்டியனிடம் தோல்வியுற்ற சுந்தரபாண்டியன் மாலிக்காபூரின்
உதவியை நாடியதாகக் கூறப்படுகிறது. ஓய்சளர்களை வென்ற
மாலிக்காபூர் ஸ்ரீரங்கம், சிதம்பரம் ஆகிய கோவில்களைத்
தாக்கிக் கொள்ளையிட்டபின் மதுரையை அடைந்தார் (1311),
மதுரையைச் சூறையாடினார். இவர் படையெடுப்பு இராமேஸ்வரம்
வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏராளமான கொள்ளைப்
பொருள்களுடன் மாலிக்காபூர் டில்லி திரும்பினார். (1311)
மாலிக்காபூரின் படையெடுப்பிற்குப்பின் பாண்டிய மன்னர்கள்
சிதறுண்டு தமிழகத்தில் ஆங்காங்கு ஆட்சி புரிந்தனர்.

முகம்மது பின் துக்ளக் டில்லி சுல்தானாக ஆட்சி புரிந்த
காலத்தில் (1325-1351) தமிழகத்தின் பெரும்பகுதி டில்லி சுல்தானிய
அரசின் 23 மாநிலங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டது. ஆனால்,
முகம்மது பின் துக்ளக்கின் வலிமையற்ற ஆட்சியைப் பயன்படுத்தி
ஜலாலுதீன் அசன்ஷா என்ற மதுரை ஆளுனர், மதுரையைத்
தலைநகராகக்கொண்டு ‘மதுரை சுல்தானிய அரசை’ (Madurai
Sultanate) ஏற்படுத்தினார்.(1335). இஸ்லாமியப் படையெடுப்பால்
தமிழக, குறிப்பாக மதுரை, திருப்பத்தூர், திருவொற்றியூர்க்
கோயில்கள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் தர்காக்கள், மசூதிகள்
எழுந்தன. இஸ்லாமியப் பெயர்களைத் தாங்கிய நகரங்கள் எழுந்தன.