பக்கம் எண் :

76தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

குடைவரைக் கோவில் உள்ளது. இதுவும் பல்லவர்
காலத்ததாகும். கருவறைகள், துவாரபாலர்களின் சிற்பங்கள்
யாவும் மலைப்பாறையில் வடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள
துவாரபாலர்களின் சிற்பங்கள் வேலைப்பாடு மிக்கவையாக
உள்ளன.

மலையின் அடிவாரத்தில், ஊரின் மத்தியில்
தாழக்கோவில்
என்ற பக்தவத்சல ஈஸ்வரர் கோவில்
உள்ளது. இக்கோவிலின் இறைவி திரிபுரசுந்தரி எனப்படுகிறார்.
இக்கோவில் சடையவர்மன் சுந்தர பாண்டியனால்
கி.பி. 1260இல் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. இக்கோவிலில்
நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன. கோவிலின் முகமண்டபத்தில்
அழகிய ஓவியங்கள் உள்ளன. இம்மண்டபம் கி.பி. 18ஆம்
நூற்றாண்டில் தம்பி எல்லப்பர் என்பவரால் கட்டப்பட்டிருக்கலாம்
என்று கருதப்படுகிறது.

செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் வரும் சாலையில்
3 கி.மீ. தொலைவில், வல்லம் என்ற இடம் உள்ளது. இங்குப்
பல்லவர் காலக் குகைக் கோவில்கள் மூன்று உள்ளன. இவற்றுள்
இரண்டு சிவனுக்காகவும் ஒன்று விஷ்ணுவுக்காகவும்
வடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ‘வசந்தீஸ்வரம்’ குகைக் கோவில்
அளவில் பெரியதாக உள்ளது. இங்குள்ள மகேந்திரவர்மன்
காலத்துக் கல்வெட்டுமூலம் இக்குடைவரைக் கோவிலை,
மகேந்திரவர்மனது சிற்றரசனாக வல்லம் பகுதியை ஆண்ட
கந்தசேனன்
தன் தந்தை ‘வயந்தப் பிரியன்’ பெயரால்
வெட்டுவித்தார் என்று அறியப்படுகிறது.

திருக்கழுக்குன்றத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில்
திருப்போரூர் உள்ளது. இங்கு முருகப்பெருமானின் புகழ்மிக்க
ஆலயம் உள்ளது. சிதம்பர சுவாமிகள் என்பவரால்
இது கட்டப்பட்டது.

திருக்கழுக்குன்றத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில்
மதுராந்தகம்
உள்ளது. இங்குப் புகழ்மிக்க வைணவ ஆலயம்
உள்ளது. இது ஸ்ரீ கோதண்டராமருக்குரிய ஆலயமாகும்.
மதுராந்தகத்தில் சுவேதரனீஸ்வரர் என்ற சிவனுக்குரிய
ஆலயமும் உள்ளது.