பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்89

காணலாம். இக்கோவிலையடுத்துச் சமண சமயத்தாரின் பெரிய
மடம் ஒன்று உள்ளது.

திருவண்ணாமலையிலிருந்து 32 கி.மீ. தொலைவிலுள்ள
சாத்தனூர் அணை தமிழ்நாட்டிலுள்ள முக்கிய அணைகளில்
ஒன்றாகும். மகிழ்வுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக
இது உள்ளது.

திருக்கோவிலூர்

திருவண்ணாமலையிலிருந்து 35 கி.மீ. தொலைவில்
திருக்கோவிலூர் உள்ளது. இந்நகரைச் சுற்றிய பகுதியின் பண்டைய
பெயர் மலைநாடு ஆகும். இந்நகரில் பழமைமிக்க வைணவ கோவில்
ஒன்று உள்ளது. இது திருவிக்ரம பெருமாளுக்குரியது.
விஜயநகரத்திலிருந்து கலைஞர்கள் இங்கு வரவழைக்கப்பட்டு
இக்கோவிலின் கட்டடச் சிற்ப வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்
என்று கூறப்படுகிறது. திருக்கோவிலூரில் கீழையூர் என்ற பகுதி
உள்ளது. இது மலையமான்களின் தலைநகராகக் கி.பி. 10,
11ஆம் நூற்றாண்டுகளில் விளங்கியது. இங்கு வீரட்டானீஸ்வரர்
கோவில் உள்ளது.

திருக்கோவிலூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தியாக
துர்க்கம்
உள்ளது. இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டை
ஒன்று உள்ளது. கி.பி. 1759இல் இக்கோட்டையைப் பெற்ற
பிரெஞ்சுக்காரர்கள் இதைப் பலப்படுத்தினர். பிரெஞ்சுக்காரர்கள்
வீழ்ச்சியையடுத்து, மைசூர் மன்னர் ஹைதர் அலியின் பொறுப்பில்
சிறிது காலம் இக்கோட்டை இருந்தது. பின் ஆங்கிலேயரால்
இக்கோட்டை மீட்கப்பட்டது. கி.பி. 1790இல் திப்பு சுல்தானின்
படைகள் தியாக துர்க்கத்தைக் கைப்பற்ற முயன்றபொழுது, பிளின்ட்
என்ற ஆங்கிலத் தளபதி இதைத்தடுத்தார். தமிழ்நாட்டில்
எஞ்சியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகளில் தியாக
துர்க்கம் கோட்டை ஒன்றாகும்.