பெற்றியகாண்’70 என்று பாடினார் என்றும் கூறுவர் இவ் வாய்வாளர். ஆனால், இதே கருத்தை நிறுத்தித் திருவள்ளுவர் ‘பிறர்க் கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’ என்று ஒரு குறட்பாவைத் தந்துள்ளார். எனவே, திருக்குறளைக் கற்றும் இளங்கோ இவ்வற மொழியைத் தம் நூலில் சேர்த்திருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது. மேலே கூறியவற்றால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் சேரன் செங்குட்டுவன் வாழ்ந்த காலத்திலேயே இயற்றப்பட்டிருக்க முடியாது என்று கொள்ள வேண்டியுள்ளதாயினும், கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டில் அவை எழுந்தன என்று கூறி அவற்றின் பழைமையை மறுப்பது ஆய்வுக்குச் சற்றேனும் ஏலாததாகும். அண்மையில் ஓர் ஆசிரியர் அதைக் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததெனக் கூறியிருப்பது பெரும் விந்தையே. தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ வைணவ மறுமலர்ச்சி மேலீட்டினால் சமயப் பூசல்கள் மலிந்திருந்தன. பௌத்தமும் சமணமும் வீறடங்கித் தாழ்ந்து வந்து கொண்டிருந்தன. ஆனால், அவ்விரு சமயங்களும் சைவ வைணவ சமயங்கள் ஒத்திருந்து எவ்வித வேறுபாடுகளுமின்றி மக்கள் வாழ்க்கையில் இடம் பெற்றிருந்த காலத்தில் இவ்விரு காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன வாகையால் அவற்றைக் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டனவாகக் கொள்ளுதலே பொருத்தமாகும். அஃதுடன் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்றான் கணபதி வழிபாடு தமிழகத்தில் தொடங்கிற்று. சிலப்பதிகாரத்தில் அதைப் பற்றிய குறிப்புகளே காணப்படவில்லை. எனவே, சிலப்பதிகாரம் 7ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தின் படைப்பு என்பதில் ஐயமேதுமில்லை. இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவன் உடன்காலத்தவர் அல்லர் ; பிற்காலத்தவர். தம் காப்பியத்துக்கு ஏற்றதொரு பின்னணியைப் படைத்தளிக்க இவர் எண்ணினார். அக் காரணத்தால் சேரன் செங்குட்டுவன் காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டில்) காப்பியக் கதை நிகழ்ந்ததாகக் கற்பனை செய்தார். அதனால் காஞ்சியைப் பற்றிப் பலமுறை தம் காப்பியத்தில் குறிப்பிடுகின்றாராயினும் அதில் பல்லவ மன்னரைப் பற்றியோ களப்பிரரைப்பற்றிய குறிப்போ கொடுக்கவில்லை. எனினும், இவ்விரு காப்பிய ஆசிரியர்கள் சேரன் செங்குட்டுவன் காலத்தை யடுத்து இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் வாழ்ந்தவர்கள் ஆதலால், கதையின் கற்பனையானது வரலாற்று உண்மையுடன் ஒத்து நடக்கின்றது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு 70. சிலப். 2 : 3.4 |