பக்கம் எண் :

128

                8. பண்டைத் தமிழரின் வாழ்க்கை

     தமிழகத்து வரலாற்றுக்குட்பட்ட காலம் சங்க காலம். இக் காலத்தில்
தமிழரின் நாகரிகம் முழு மலர்ச்சியுற்றிருந்தது. பாண்டியன், சோழன், சேரன்
என்ற முப்பெரும் மன்னர் அரசாண்டு வந்தனர். பாண்டியரின் தலைநகரம்
மதுரை; சோழரின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினம். புகார் அல்லது பூம்புகார்
என்றும் இந் நகரத்துக்குப் பெயர்கள் உண்டு. சேரனின் தலைநகரம் வஞ்சி
என்பது. தமிழ்மொழி வழங்கி வந்ததால் நாட்டுக்குத் தமிழகம் என்றும்,
மக்களுக்குத் தமிழர் என்றும் பெயர்கள் எய்தின. ஆகவே, நாட்டுக்கும்,
மக்களுக்கும் அவர்கள் பேசிய மொழிக்குமிடையே நெருங்கிய ஒரு
தொடர்பைக் காண்கின்றோம். தமிழ்மக்கள் தாம் பேசிய மொழியுடன்
இணைந்து வாழ்ந்தனர். தமிழர் வேறு, தமிழ் வேறு என்று பிரிக்க முடியாத
அளவு அம் மொழியானது தமிழர் வாழ்வில் இடங்கொண்டது. தமிழரின்
வாழ்வு, தமிழர் பேசிய மொழி, தமிழர் வாழ்ந்த நிலம் ஆகிய இம்
மூன்றுக்கும் இயல்பான, நெருங்கிய தொடர்பு ஒன்று உண்டு என்ற உண்மை
தமிழரின் நாகரிகத்தின் அடிப்படைத் தத்துவமாக அமைந்துள்ளது. இத்
தத்துவத்தை விளக்குவனவே சங்க இலக்கியங்கள். இவ் விலக்கியங்களின்
துணையின்றித் தமிழரின் பண்டைய வரலாற்றையும் பண்பாட்டையும்
அறிந்துகொள்ள முடியாது. தமிழ் நிலத்தின் உயிர்நாடி தமிழ் மக்கள்; தமிழ்
மக்களின் உயிர்நாடி தமிழ் மொழியாகும். தமிழைப் போற்றி வளர்ப்பதும்,
தமிழ்ப் புலவரைப் பாராட்டிப் புரந்து வருவதுமே தமிழ் மன்னரின்
முதற்கடமையாக இருந்து வந்தது. கோடி கொடுத்தும் புலவர் ஒருவரின்
பாட்டைப் பெறுவதற்கு மன்னர்கள் ஆவலாக இருந்தனர். தமிழ் மன்னன்
ஒருவன் தனக்கு இறவாமை அளிக்கக்கூடிய கனி ஒன்றைத் தான் உண்டு
பயனடையாமல் அதைத் தமிழ்ப் புலவர் ஒருவருக்கு அளித்துத் தனக்கும்,
அவருக்கும், தமிழ்மொழிக்கும் இறவாத புகழைப் பெற்றுக் கொடுத்தான்.
சங்ககால மன்னர்கள் எழுப்பிய எழிலோங்கு அரண்மனைகள்,
மாளிகைகள், அங்காடிகள், கோயில்கள், துறைமுகங்கள், பந்தர்கள்,
அவர்கள் ஓட்டிய நாவாய்கள் அனைத்தும்