இப்போது மறைந்துவிட்டன. ஆனால் அவர்கள் காலத்துப் புலவர்கள் பாடிய பாடல்கள் பல இப்போதும் எஞ்சி நிற்கின்றன. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும், பதினெண் கீழ்க்கணக்கும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பழந்தமிழரின் சால்பை விளக்கிக் காட்டுகின்றன. தாம் வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையும், பண்பாடும் அமையும் என்பது பண்டைய தமிழரின் சிறந்ததொரு கொள்கையாகும். அஃதுடன் ‘காலம்’ என்ற தத்துவமும் மக்கள் வாழ்க்கையில் பேரிடங்கொண்டது. ஆகவே, மக்கள் வாழ்ந்த இடமும், காலமும், அவர்களுக்குத் தேவையான முதற்பொருள் எனக் கொள்ளப் பட்டன.1 ஓரறிவுடைய புல் முதல் ஆறறிவுடைய மக்கள் ஈறாகிய உயிர்ப்பொருள்களும் ஏனைய உயிரில்லாத பொருள்களும் முதற்பொருள்களின் சார்பாக நின்று கருக்கொண்டு உலகின்மேல் தோற்றுகின்றன ஆகையால் அவற்றுக்குக் கருப்பொருள்2 என்று பெயர் வழங்கிற்று. மக்கள் வாழ்க்கையின் செய்திகளைப் புலப்படுத்துவது உரிப்பொருள்3 எனப் பெயர் பெற்றது. முதற்பொருள் இரண்டனுள் நிலமானது நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது: காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை என்றும், மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் என்றும், கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் என்றும் பெயர் பெற்றன. முல்லைக்குக் கடவுள் மாயோன் (திருமால்), குறிஞ்சிக்குக் கடவுள் சேயோன் (முருகன்), மருதத்தின் கடவுள் வேந்தன் (இந்திரன்), நெய்தலுக்குக் கடவுள் வருணன். இந் நான்கு பிரிவுகளல்லாமல் வேறொரு நிலப்பிரிவும் உண்டு. அதற்குப் ‘பாலை’ என்று பெயர். ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து, நல் இயல்பு இழந்து, நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்’ என்று பாலை நிலம் விளக்கப்படுகின்றது.4 அதாவது கோடை வெய்யிலில் மரஞ்செடிகள் உலர்ந்து, நீர்நிலைகள் வறண்டு காணப்படும் இடங்கட்குப் பாலை என்று பெயர். இந் நிலத்துக்குத் தெய்வம் கொற்றவை. இவ்வைந்து நிலத்தின் பாகுபாடுகளுக்குத் ‘திணைகள்’ என்று பெயர். 1. தொல். பொருள். அகத். 4 2. தொல். பொருள். அகத். 18 3. தொல். பொருள். அகத். 14. 4. சிலப். 11 : 64-66 |