‘திணை’ என்னும் சொல்லுக்குக் ‘குடி’5 என்றும் ஒரு பொருள் உண்டு. குடிகள் வாழும் நிலமும் ‘திணை’ எனப்பட்டது. சொல்லிலக்கணத்தில் விளக்கப்படும் திணைகள் வேறு. அவை உயர்திணை, அஃறிணை என்பன. பொருள் இலக்கணத்தில் விளக்கப்படும் இவ்வைந்து திணைகளும் மக்கள் வாழ்க்கையைப் பற்றியவை. திணை என்னும் சொல் நிலத்தை மட்டுமன்றி நிலத்தின் அமைப்பு, அங்கு வாழும் மக்கள் இயல்பு, அங்கு உயிர் வாழும் விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் மரங்கள், உழவுப் பயிர் வகைகள், மக்கள் வழிபட்டு வந்த தெய்வங்கள் ஆகிய யாவற்றையும் குறித்து நிற்கும். மொழிக்கு மட்டுமன்றி மக்களுடைய வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துக்கொண்ட பெருமை பழந்தமிழரைச் சாரும். வாழ்க்கைக்கு ஒழுங்குமுறைகள் வகுத்துக் கொடுத்த இலக்கணத்துக்குப் பொருள் இலக்கணம் என்று பெயர். தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே திணைகள் வழக்கில் இருந்துவந்தன. அவை தொல்காப்பியரால் நிறுவப்பெற்றவை அல்ல. எனவே, பொருளிலக்கணமும் தொல்காப்பியத்துக்கு முன்பு இயற்றப் பட்டிருக்க வேண்டும். ‘முதலெனப் படுவது நிலம்பொழுது இரண்டின் இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே’ என்று தொல்காப்பியர் தமக்கு முன்பு இலக்கணம் வகுத்திருந்த ஆசிரியர்களைச் சுட்டிக் காட்டுகின்றார். ஒரு மொழியில் இலக்கணம் வகுக்கப்படு முன் இலக்கியம் வளர்ந்திருக்க வேண்டும். மொழியானது பல காலம் வளர்ந்து வந்த பிறகுதான் பொருள்களையும் அவற்றைக் குறிக்கும் சொற்களையும் திட்டமாக வரையறுத்து உணரவேண்டிய நெருக்கடி ஒன்று நேரும். அப்படி வரையறுக்கத் தவறினால் எண்ணங்களிலும் பேச்சிலும் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும். இந்த இழிநிலையை ஒரு மொழியானது எய்தாதவாறு அதற்கு இலக்கண வரம்பீடு செய்தல் இன்றியமையாததாகும். அதைப் போலவே, மக்கள் வாழ்க்கைக்கு இலக்கண விதிமுறைகள் வகுப்பதற்கு முன்னர் அவ் வாழ்க்கை நன்கு வளர்ச்சியும் வளமும் பெற்றிருக்க வேண்டும். வளர்ச்சி பெற்று நிலைத்து வாழும் சமூகத்துக்குத் தான் ஒழுங்கு விதிகள் தேவைப்படும். ஒழுக்கமுறைகளை வகுத்து அவற்றின்படியே மக்கள் வாழ வேண்டுமென்று விதிப்பது இயற்கைக்கு முரணாகும். எனவே, தமிழில் பொருள் இலக்கணம் ஒன்று தோன்றுவதற்கு முன்பே மக்கள் அதில் வகுத்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் என்பதில் ஐயமின்று. அவ் வாழ்க்கையை 5. புறம். 27 |