முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு திணைகளில் வாழ்ந்த மக்கள் உழைத்துப் பொருளீட்டுவர்; காதலிப்பர்; மணப்பர்; இல்லறத்தில் நின்று இன்பம் துய்ப்பர். இவ்வொழுக்கங்கள் யாவும் மக்களுக்கே உரியன. எனவே, அவற்றுக்கு உரிப்பொருள் என்று பெயர். ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு காதலித்து மணந்து இல்லறம் நடத்தி வருவதை ‘அகம்’ என்றும், மக்கள் அரசியல் வாழ்விலும் போரிலும் ஈடுபடுவதைப் ‘புறம்’ என்றும் பொருள் இலக்கணம் குறிப்பிடும். உலக அமைப்பை முதல், கரு, உரி என மூன்றாக வகுத்து, உலகில் வாழும் மக்களின் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பாகுபடுத்தி, அதை இயற்கையுடன் இயைபுறுத்தியது பண்டைய தமிழரின் சிறந்ததொரு பண்பாடாகும். பழந்தமிழகத்தில் மக்கள் இல்லற வாழ்க்கையையே பெரிதும் பாராட்டி வந்தனர். ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ்வாங்கு வாழ்வாராயின் அவர்களுக்கு வீடுபேறு தானாக வந்தெய்தும் என்பது தமிழரின் கொள்கையாக இருந்தது. இக் காரணத்தினாலேயே திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலை மட்டும் பாடினார்; வீட்டைப்பற்றிப் பாடினாரில்லை. அவருடைய காலத்திலேயே ஆரியரின் பழக்க வழக்கங்களும், புராணங்களும், தத்துவங்களும் தமிழகத்தில் குடி புகுந்து விட்டன. தருமம், அருத்தம், காமம், மோட்சம் என்னும் ஆரியரின் புருடார்த்தங்களைத் திருவள்ளுவர் அறிந்திருப்பார். இருப்பினும் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையே தமிழரின் பண்பாட்டுக்கு உடன்பாடாகக் கொண்டு, மரபு வழுவாது அவர் திருக்குறள் என்னும் அறநூலை இயற்றினார். ‘இல்லற மல்லது நல்லற மன்று’ என்பது பிற்காலத்து எழுந்த கொன்றைவேந்தன் மொழியாகும். ஒருவனுடைய உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத துணை அவன் மனைவியே ஆவாள். அவளுக்கு ‘வாழ்க்கைத் துணை’ என்னும் சிறப்பைக் கொடுக்கின்றார் திருவள்ளுவர். சங்க இலக்கியங்களுள் பெரும்பாலானவை அகப்பொருளையே பேசுகின்றன. எட்டுத்தொகையுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகப்பொருள் சார்புடையவை. பல வகையிலும் ஒத்த நலன்களையுடைய ஒருவனும் ஒருத்தியும் கூடுங்காலத்துப் பிறப்பது இன்பம். அதனை இன்னதென்று சொல்லால் விளக்க முடியாது; |