பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 133

அவர்கள் அகத்தால், அதாவது உள்ளத்தால்தான் உணர முடியும். அத்தகைய
இன்பம் அகம் எனப்பட்டது. ஏனைய இன்பங்கள் யாவும் புறமாகும். அகத்தில்
காதல் மலர்கின்றது; புறத்தில் வீரம் சிறக்கின்றது. ஆண் பெண்
விருப்பத்தினால் அகத்திணை உண்டாகின்றது. மண்ணாசையாலும்,
பொன்னாசையாலும், பசியாலும் புறத்திணை உண்டாகின்றது.

     மணப் பருவம் எய்திய காதலர்கள் தாமாகவே கூடியோ அன்றிப்
பிறரால் கூட்டப்பெற்றோ கணவன் மனைவியாவர், காதலர்கள் தாமாகக்
கூடும் கூட்டத்துக்குக் ‘களவு’ என்று பெயர். பிறர்க்கு உரித்தான ஒரு
பொருளை அவரறியாவாறு அவரிடமிருந்து கவர்ந்து கொள்ளுவது ‘களவு’
எனப்படும். பழந்தமிழர் ஊழின் பெருவலியில் நம்பிக்கை கொண்டவர்கள்.
ஆகவே, காதலர்கள் ஒன்றுகூடுவதற்கே அவர்களை ஊழ் கூட்டுவிக்க
வேண்டும் என்று அவர்கள் கருதினர். காதலர் இருவர் ஒருவரையொருவர்
ஒருமுறை கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்து விடுவராயின், மீண்டும் அவர்கள்
வேறு யாரையும் காதலிப்பதில்லை. அவர்களுடைய திருமணம் எவ்விதமான
இடையூறுமின்றி நடைபெறுவதற்குக் காதலனின் தோழனும், காதலியின்
தோழியும் துணை நிற்பர். அகப்பொருள் இலக்கணத்தில் காதலனைத்
தலைவன் என்றும், காதலியைத் தலைவி என்றும் அழைப்பது மரபாகும்.

     தம் காதல் முற்றுப்பெறுவதற்கு இடையூறுகள் நேருமாயின் தலைவனும்
தலைவியும் சேர்ந்து ஊரைவிட்டே வெளியேறிவிடுவதுமுண்டு.6
அவர்களுடைய காதலின் உறுதியையும் நேர்மையையும் பாராட்டி அவர்கள்
பெற்றோர்கள் அவர்கட்குத் திருமணம் முடித்து வைப்பர். களவு
ஒழுக்கமானது இரண்டு மாத காலத்துக்குமேல் நீடிக்கக்கூடாது என்பது மரபு.
‘இந்த உலகத்தையே நான் உனக்கு ஈடாகப் பெற்றாலும் நான் உன்னைக்
கைவிடேன்’7 என்று தலைவன் தலைவிக்கு உறுதி கூறுவான். அவள்
வேப்பங்காயைக் கொடுத்தாலும் அதை வெல்லக்கட்டியென மகிழ்ந்துண்பான்
அவன்.8 தலைவன், ‘உன் கூந்தலைப் போல நறுமணமுள்ள மலர் ஒன்றை
உலகிலேயே நான் கண்டதில்லை’ என்று தன் காதலியின் கூந்தலைப்
பாராட்டி இன்புறுவான்.9

     6. பாலைக் கலி, 8.
     7. குறுந். 300
     8. குறுந். 196.
     9. குறுந். 2