பக்கம் எண் :

134தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     அகத்திணையுள் திருமண வாழ்க்கை ‘கற்பு’ என அழைக்கப் படுகின்றது.
தலைவன் தலைவியர் இருவரின் பெற்றோரும் அவர்களுடைய திருமணத்துக்கு
உடன்படுவர்.10 திருமணம் ஒரு நல்ல நாளில் நடைபெறும்.11 தீய கோள்கள்
இடம் விட்டு விலகவும், நிலா உரோகிணியுடன் கூடவும் வேண்டும்.
விடியற்காலையிற்றான் திருமணம் நடைபெறும். திருமணப் பந்தலில் புதுமணல்
பரப்பப்படும்; மாலைகள் தொங்கவிடப்படும்; அழகிய விளக்குகளை ஏற்றி
வைப்பார்கள். வயது முதிர்ந்த மங்கல மகளிர் தண்ணீரைக் குடங்களில்
முகந்து தம் தலையின் மேல் தூக்கிக் கொண்டு வந்து ‘சிறு மண்டை’ என்னும்
அகன்ற வாயுடைய கலத்தில் பெய்து கொடுப்பர். குழந்தைகளைப்
பெற்றெடுத்த மங்கல மகளிர் நால்வர் கூடி அத் தண்ணீரை வாங்கி, அதில்
பூவிதழ்களையும், நெல் மணிகளையும் சொரிந்து அத் தண்ணீரினால்
மணமகளை நீராட்டுவார்கள். இச் சடங்குக்கு ‘வதுவை நன்மணம்’ என்று
பெயர். அப்போது அப்பெண்டிர், ‘இவள் கற்பு நெறியினின்றும் வழுவாமல்,
தன்னைக் கொண்ட கணவனை விரும்பிப் பேணும் விருப்பமுள்ள
துணைவியாவாளாக’ என அம் மணமகளுக்கு வாழ்த்துக் கூறுவர். மணமகளின்
பெற்றோர் ‘பெரிய ஓர் இல்லத்துக் கிழத்தியாக ஆவாய்’ என்று வாழ்த்தி
அவளை மணமகனுக்குக் கொடுப்பர்.

     உளுத்தம் பருப்புடன் கலந்த அரிசிப் பொங்கல் மண விழாவுக்கு
வந்தவர்கட்கு இடையறாது வழங்கப்பெறும்.12 இறைச்சியும் நெய்யும் கூட்டி
ஆக்கிய வெண்சோற்றையும் வழங்குவதுண்டு. திருமண வினைகள்
தொடங்குமுன்பு கடவுள் வழிபாடு நடைபெறும். மணமுழவு முழங்கும்.
வெண்மையான நூலில் வாகையிலைகளையும், அறுகம்புற் கிழங்குகளையும்
கோத்த மாலையை மணமகள் அணிந்து கொள்ளுவாள். மணமகன்
மணமகளுக்குத் தாலி கட்டியதாகச் சங்கத் தமிழில் சான்று ஏதும்
கிட்டவில்லை. ‘ஈகையரிய இழையணி மகளிரொடு’ - அதாவது பிறர்க்குக்
கொடுத்தற்கரிய இழை-என்று புறப்பாடல் ஒன்றில் குறிப்புக் காணப்படுகின்றது.
ஆனால், அது திருமணத்தின்போது அணிவிக்கப்பட்ட தென்பதற்குச்
சான்றில்லை. ஐம்படைத் தாலியையும் புலிப்பல் தாலியையும் குழந்தைகட்குக்
காப்பணியாக அணிவிக்கும் வழக்கம் அக் காலத்து உண்டு. ஆனால்,
திருமணத்தின் போது மங்கலநாண் பூட்டும் வழக்கம் பழந்தமிழரிடையே
இல்லை போலும். அவ் வழக்கம் இருந்திருப்பின்

     10. தொல். பொருள். கற்பு. 1
     11. அகம். 86, 136
     12. அகம். 86