பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 135

எல்லாத் திருமணச் சடங்குகளையும் குறிப்பிடும்போது தாலி கட்டுவதென்னும்
தலையாய சடங்கைக் குறிப்பிடாமல் இரார். ஆரியர் பண்பாடும் பழக்க
வழக்கங்களும் பெருகிவந்த காலத்து எழுந்த நூலான சிலப்பதிகாரத்திலும்
தாலி கட்டும் சடங்கைக் குறிப்பிடவில்லை. ஆனால், தமக்குத் திருமணம்
ஆகிவிட்டதைத் தெரிவிப்பதற்காக அக்காலத்துப் பெண்கள் மங்கல அணி
ஒன்றை அணிந்திருக்க வேண்டுமென்றும், திருமண நாளன்று அம் மங்கல
அணியை ஊர்வலமாகக் கொண்டுவரும் வழக்கம் இருந்தது என்றும்
அறிகின்றோம்.13 இம் மங்கல அணியையே மேலே எடுத்துக் காட்டிய
புறப்பாட்டுக் குறிப்பிடுகிறது போலும்.14 ‘மங்கல அணி’ என்று வரும் வேறு
இடங்களில் அடியார்க்கு நல்லார் அதற்கு ‘இயற்கையழகு’ என்றே உரை
கண்டுள்ளார்.15 எனவே, பழந்தமிழர் மாங்கலிய நாண் பூட்டித் திருமணம்
முடித்தனர் என்று திட்டமாகக் கூறுவதற்கில்லை. ஆண்டாள் நாச்சியார்
கண்ணன் தம்மை மணந்ததாகக் கண்ட கனவைத் தம் தோழியினிடம்
கூறும்போது திருமணச் சடங்குகள் அத்தனையும் கூறியவிடத்துத் தமக்குக்
கண்ணன் தாலி கட்டியதாகக் கூறவில்லை. ‘மைத்துனன் நம்பி மதுசூதனன்
வந்தென் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்’ என்று மட்டுந்தான்
தெரிவிக்கின்றார். கந்தபுராணம், பெரிய புராணம் ஆகிய நூல்களில்
குறிப்பிடப்படும் திருமணங்களிலும் மணமகன் மணமகளுக்குத் தாலி
கட்டியதாகத் தெரியவில்லை. சீவகசிந்தாமணியில் அரசியர் அணிந்திருந்த
‘நாணுள்ளிட்டுச் சுடர்வீச நன்மாணிக்க நகுதாலி’யும் திருமணத்தின்போது
கட்டப்பட்டதென்று கொள்ளுவதற்குச் சான்றில்லை.16 எனவே,
திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம்
பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு ஏற்படவில்லை என்று ஊகிக்க
வேண்டியுள்ளது. இவ் வழக்கத்தைத் தெரிவிக்கும் முதல் கல்வெட்டு கி.பி. 958
ஆம் ஆண்டுக்குரியதாகும்.17

     திருமண நாளன்று இரவே மணமக்கள் மணவறையில் கூட்டப்
பெறுவர்.18 அங்கு மணமகள் கசங்காத புத்தாடையால் தன் உடல் முழுவதும்
போர்த்துக் கொண்டிருப்பாள். சங்க காலத்துத் திருமண விழாவைப்பற்றிக்
கூறும் அகப்பாட்டுகள் இரண்டிலும் புரோகிதன் ஒருவன் இடையிலிருந்து
மணவினைகள் புரிந்ததாகச் செய்திகள் இல. ஆனால், கோவலன் கண்ணகியை
மணந்தபோது மாமுது பார்ப்பான் மறைவழி காட்டியதாகவும்

     13. சிலப். 1 : 47
     14. புறம். 127.
     15. சிலப். 4 : 50.
     16. சீவக.3697
     17. 5.1. XIII No.144
     18. அகம். 136