பக்கம் எண் :

136தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

மணமக்கள் தீ வலம் செய்ததாகவும் இளங்கோவடிகள் கூறுகின்றார். சங்க
காலம் முடிவுற்றுக் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குள் திருமணங்களில் பார்ப்பான்
புரோகிதம் செய்யும் வழக்கம் மக்களிடையே பரவிவிட்டதென இதனால்
அறிகின்றோம்.

     பெண்ணின் கற்பைப் போற்றி வந்தனர் பழந்தமிழர். கற்புடைய
மனைவியைத் தவிர்த்து ஒருவன் பெறும்பேறு வேறு ஒன்றும் இல்லை என்று
அவர்கள் கருதினர். ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள-கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்?’19 என்றும், ‘புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை
இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை’20 என்றும் ‘தெய்வம் தொழாஅள்
கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’21 என்றும்
பெண்ணின் கற்புத் திறத்தைப் பாராட்டுகின்றார். கற்பு என்னும் ஒழுக்கம்
ஆண்களுக்கும் உரிய பண்பாகவே அந் நாளில் கருதப்பட்டது. நான் ‘இப்
போரில் வெற்றி பெறேனாயின் என் மனைவியை விட்டுப் பிரிந்த பழியைப்
பெறுவேனாவேன்’22 என்று சங்ககாலத்துத் தமிழன் ஒருவன்
சூளுரைக்கின்றான். எனினும் பழந்தமிழரின் சமுதாயத்தில் ஆண்களின்
கற்புநிலையை மன்னனோ, அறமோ, புலவர்களோ வற்புறுத்தியதாகத்
தெரியவில்லை. திருமணம் செய்துகொண்ட ஆடவன் தன் மனைவியை
விட்டுப் பிரிந்து பரத்தையரைத் தழுவிக் காலங்கழிப்பதும், அவனுடைய
மனைவியானவள் அவனுடைய பிரிவை நினைந்து வருந்தி நைதலும்
வழக்கமாகிவிட்டிருந்தது.

     பேகன் என்ற மன்னன் தன் மனைவி கண்ணகியைப் பல நாள்
துறந்திருந்தான்.23 மன்னரைப் போலவே பொதுமக்களும் பரத்தையர் நட்பில்
திளைத்து வருவதுண்டு. அருவருக்கத்தக்க இத் தீய ஒழுக்கம் மருதத்திணை
மக்களின்பால் மட்டுந்தான் காணப்பட்டது. மதுரையில் எண்ணற்ற பரத்தையர்
வாழ்ந்திருந்தனர் என்னும் செய்தியை மருதக் கலி24 ஒன்று தெரிவிக்கின்றது.
அங்கு வாழ்ந்த பரத்தையரை ஓரூர் முழுவதிலுமே குடியேற்றலாம் என்று அக்
கலிப்பாட்டுக் கூறுகின்றது. பரத்தையரைத் தொல்காப்பியனார்
‘காமக்கிழத்தியர்’ என்று குறிப்பிடுகின்றார்.25 இச் சொல்லுக்கு
நச்சினார்க்கினியர் ‘காமக்கிழத்தியராவர் கடனறியும் வாழ்க்கையுடையராகிக்
காமக்கிழமை பூண்டு இல்லறம் நிகழ்த்தும் பரத்தையர்’ என்று விளக்கந்
தருகின்றார்.

    19. குறள். 54.
    20. குறள். 59.
    21. குறள். 55.
    22. புறம். 71 : 6.
    23. புறம். 143, 147.
    24. மருதக்கலி. 2.
    25. தொல்.பொருள்: கற்பியல், 10.