பூசலும் மூண்டு வந்தன. சளுக்கர்கள் வேங்கியைப் கைப்பற்றி மகேந்திரன்மேல் வெற்றிகண்டனர். காஞ்சிபுரத்தை யடுத்துள்ள புள்ளலூர் என்ற இடத்தில் மகேந்திரவர்மன் சளுக்கரை அழித்தான் என்று காசக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. இவன் செந்தகாரி (கோயில் கட்டுபவன்), மத்தவிலாசன் (இன்பம் விரும்புபவன்), சித்திரகாரப் புலி (ஓவியர்க்குப் புலி) என்ற விருதுகள் சிலவற்றையும் மேற்கொண்டான். ஒரே பாறையில் குடைந்து கோயில்கள் அமைக்கும் சிற்ப மரபானது தமிழகத்தில் முதன்முதல் மகேந்திரவர்மனாற்றான் தோற்றுவிக்கப் பெற்றது. புதுச்சேரிக்கு அண்மையிலுள்ள மண்டகப்பட்டு, திருச்சிராப்பள்ளி, பல்லாவரம், செங்கற்பட்டுக்கு அண்மையிலுள்ள வல்லம், மாமண்டூர், தளவானூர், சீயமங்கலம், மகேந்திரவாடி ஆகிய இடங்களிலும் இவன் குகைக் கோயில்கள் குடைந்துள்ளான். அக் கோயில்களில் அவன் பொறிப்பித்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. ‘செங்கலின்றி, மரமின்றி, உலோகமின்றி, காரையின்றிப் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களுக்கு விசித்திரசித்தன் இக் கோயிலை ஆக்கினான்’ என்று இவனுடைய மண்டகப்பட்டுக் கல்வெட்டு வியந்து கூறுகின்றது. மகேந்திரவர்மன் மகேந்திரவாடி ஏரியைக் கட்டி உழவுக்கு உதவினான். சிற்பத்திலும் ஓவியத்திலும் மட்டுமன்றி இசையிலும் இவ்வேந்தன் வல்லுநனாக இருந்தான். இவனுடைய இசைப் புலமைக்குக் குடுமியாமலைக் கல்வெட்டுச் சான்று எனச் சிலர் கருதுகின்றனர். இக் கல்வெட்டுச் சற்றுப் பிற்காலத்தைச் சார்ந்தது என வேறு சிலர் கூறுகின்றனர். இதுபற்றி இறுதியான முடிவுக்கு வரமுடியாது. மகேந்திரவர்மன் ஆதியில் சமணனாக இருந்தான். திருநாவுக்கரசரிடம் ஈடுபாடுகொண்டு பிறகு சைவ சமயத்தைத் தழுவினான். இவன் சிவலிங்க வழிபாடு உடையவன் என்று திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டுக் கூறுகின்றது. தான் சைவனான பிறகு பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூரில்) இருந்த ஒரு சமணப் பள்ளியை இடித்து நிரவினான். முதலாம் நரசிம்மவர்மன் (சு. கி. பி. 630-668) மகேந்திரவர்மனுக்குப் பிறகு அவன் மகன் முதலாம் நரசிம்ம வர்மன் அரியணையேறினான். போரிலும் புகழிலும், தன் தந்தையினும் நரசிம்மவர்மன் மேம்பட்டு விளங்கினான். சளுக்கரின்மேல் அவன் பல வெற்றிகளைக் கொண்டான். மணிமங்கலத்தில் ஒரு முறையும், வாதாபியில் இரு முறையும் அவன் சளுக்க மன்னன் |