சீரும் சிறப்புடன் வளர்ந்து வந்தது. நாலந்தாப் பல்கலைக் கழக ஆசிரியர் தருமபாலர் என்பார் காஞ்சிபுரத்திலிருந்து பயின்று சென்றவர்தாம். அக் காலத்தில் தொண்டை மண்டலத்து மக்கள் கல்வியறிவுக்கும் சமய வளர்ச்சிக்கும் அளித்திருந்த செல்வாக்கின் உயர்ச்சியை இதனால் நாம் நன்கு அறிந்துகொள்ளுகின்றோம். முதலாம் நரசிம்மவர்மனுக்குப் பின்னர் அவன் மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் பல்லவ அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவன் ஈராண்டுகளே அரசாண்டான் (சு. கி. பி. 668-670). அவன் வருணாசிரம தருமத்தை நிலைநாட்டினான் எனவும், கடிகைகளை வளர்த்தான் எனவும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவன் சளுக்க மன்னன் விக்கிரமாதித்தனுடன் போரில் ஈடுபட்டிருந்தான் என்று அறிகின்றோம். இரண்டாம் மகேந்திரனுக்குப் பின்பு அவனுடைய மகன் முதலாம் பரமேசுவரவர்மன் (சு. கி. பி. 670-695) அரசாண்டான். சளுக்க மன்னன் தொடர்ந்து பல்லவருக்குத் தொல்லை கொடுக்கலானான். சளுக்க மன்னன் விக்கிரமாதித்தன் கைகளில் பரமேசுவரவர்மன் தோல்வியுற்றான் எனவும், பல்லவ குடும்பத்தையே சளுக்கர்கள் வேரறுத்துவிட்டனர் எனவும் விக்கிரமாதித்தனுடைய கடவால் செப்பேடுகள் (கி.பி.674) தெரிவிக்கின்றன. அவன் காவிரியின் தென்கரையில் உள்ள உறையூரிலிருந்து அவ்வேடுகளை எழுதி வழங்கியதாகவும் அவற்றினின்றும் அறிகின்றோம். ஆனால், பல்லவருடைய சாசனக் குறிப்புகள் கடவால் செப்பேடுகள் கூறும் செய்திக்கு முற்றிலும் முரணாகக் காணப்படுகின்றன. திருச்சிக்கு அண்மையில் பெருவளநல்லூரில் பல இலட்சம் சேனையுடன் போராடிய விக்கிரமாதித்தனைப் பல்லவ மன்னன் வென்று, அச்சளுக்க மன்னன் சுற்றிய கந்தையுடன் போர்க்களத்திலிருந்து ஓடச் செய்தான் என்று கூரம் செப்பேடுகள் கூறுகின்றன.4 பரமேசுவரவர்மன் சிறந்த சிவத்தொண்டன். காஞ்சிபுரத்துக்கு அண்மையில் கூரம் என்ற இடத்தில் சிவன்கோயில் ஒன்று எழுப்பினான்; மாமல்லபுரத்திலும் சில கோயில்கள் செதுக்குவித்தான். 4. S. I. I. Vol. I. pp. 144, 145. Ep. Ind. XVII. pp. 340-345. |